பத்ம விருதை விசிறி அடித்த முதல்வரின் சகோதரி… விவகாரமான விருது பட்டியல்…

Must read

பத்ம விருதை விசிறி அடித்த முதல்வரின் சகோதரி… விவகாரமான விருது பட்டியல்…

ர்.எஸ்.எஸ்.கோட்பாடுகளை விதைத்து வளர்த்த நானாஜி தேஷ்முக்,கட்சி கட்டுப்பாட்டை மீறி ஆர்.எஸ்.எஸ்.மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி,பா.ஜ.க.வின் நேற்றைய வேட்பாளர் புபேன் ஹசாரியா, நாளைய வேட்பாளர் மோகன்லால் என மத்திய அரசு அறித்துள்ள பத்ம விருதுகள் –சர்ச்சைகளையும்,சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

‘’தனது விசுவாசிகளுக்கு பத்ம விருதை பா.ஜ.க.அரசு வழங்கி உள்ளது’’என்று விமர்சித்துள்ளார்   காங்கிரஸ் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

இது போன்ற வம்பு தும்புகள்  எதிர்ப்படும் என்று  ஏற்கனவே கணித்திருந்த எழுத்தாளர் கீதா மேதா ‘விருது வேண்டாம்’’ என்று நிராகரித்து விட்டார்.

இவர் –

மறைந்த பிஜு ஜனதா தள தலைவர் பிஜு பட்நாயக்கின் புதல்வி.(பிஜு பட்நாயக் ,1980 களில் தி.மு.க.வை யும்,.அ.தி.மு.க,வையும் ஒன்றாக இணைக்க பேராசைப்பட்டு- கலைஞரையும், எம்.ஜி.ஆரையும் சந்தித்து சமரச முயற்சிகளை மேற்கொண்டவர்)

கீதா மேதா,ஒடிசாவின் தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்கின் அக்காள்.அமெரிக்காவில் செட்டில் ஆனவர்.

இலக்கியம் மற்றும் கல்வி துறையில் ஆற்றிய சேவைகளுக்காக கீதாவுக்கு பத்ம விருது வழங்கப்பட்டது.

விருது கிடைத்ததில் கீதா மேதாவுக்கு சந்தோஷம் இருந்தாலும்,சங்கடமும் இருந்தது.எனவே விருதை நிராகரித்து விட்டார்.

‘’விருது வழங்கியது எனக்கு கவுரமே.ஆனால் பொதுத்தேர்தல் நேரத்தில் இந்த கவுரவம் அளித்தது தவறாக புரிந்து கொள்ளப்படும்.எனவே விருதை ஏற்க இயலாது’’ என   விருது அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில்  நியூயார்க்கில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கீதாவின் மறுப்புக்கு பின்னால் ஒழிந்துள்ள சில செய்திகளை இங்கே சொல்லியாக வேண்டும்.

நவீன் பட்நாயக்கின் –பிஜு ஜனதா தளம் வரப்போகும் தேர்தலில் பா.ஜ.க.கூட்டணியிலும் இல்லை.காங்கிரஸ் கூட்டணியிலும் இல்லை.

மூன்றாவது அணி அமைக்கப்போவதாக நவீன் கூறி வந்தாலும் அவரை ‘’பா.ஜ.க.வின் ‘பி டீம்’’ என்றே எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.

மத்திய அரசுக்கு எதிரான ஒட்டுகளை ஒடிசாவில் நவீனும் ,காங்கிரசும் பிரிப்பதால் அது- பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருப்பது கவனிக்க தக்கது.

‘’மத்திய அரசு அளித்த விருதை கீதா உதாசீனப்படுத்தி இருப்பது சரியல்ல’’ என்று  உள்ளூர் பா.ஜ.க. கண்டனத்தை பதிவு செய்ய – காங்கிரசோ ‘’ சொல்லி வச்சு பா.ஜ.க.வும், பிஜு ஜனதா தளமும்  நாடகம் ஆடுறாங்க’’ என கிண்டல் அடித்துள்ளது.

இந்த களேபரங்கள் ஒரு புறம் இருக்க –

அசாம் மாநிலத்தில்-

விருது விவகாரம் போலீஸ் கேஸ்,வழக்கு என இன்னொரு திசைக்கு சென்று விட்டது.

அந்த மாநிலத்தை சேர்ந்த பாடகர் ஹசாரியாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.இதனை இதே மாநிலத்தை சேர்ந்த மற்றொரு பாடகரான சுபீன் கார்க் என்பவர் கடுமையாக விமர்சித்து –ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட அது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அவர் மீது அங்குள்ள இரண்டு போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட- போலீசார்  கார்க் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article