புதுடெல்லி:

பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டால், ஏனைய உயர் சாதியினரே பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனவரி 9-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை பெரிய சீர்திருத்தம் என்று கூறி பாஜகவினர் கொண்டாடினர்.

மசோதாவை எதிர்கட்சிகள் ஆதரித்தாலும், இந்த மசோதா குறித்து சில ஐயப்பாடுகளையும் எழுப்பியிருந்தனர்.

புதிய வேலைவாய்ப்பை உருவாக்காமல், பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு எப்படி சாத்தியமாகும். உச்சநீதிமன்றம் வகுத்த இடஒதுக்கீட்டு அளவை மீறுவதால், இது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படக் கூடும். எனவே இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா அரசியல் கேலிக் கூத்து என்று எதிர்கட்சிகள் கருத்து தெரவித்தனர்.

10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான தகுதியாக ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதும், 5 ஏக்கருக்கு மிகாமல் விவசாய நிலம் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

இந்த நிபந்தனையால் உயர் சாதியினரில் 80 சதவீதத்தினர் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவர். இதனால், கல்வி, வேலை வாய்ப்பில் ஏனைய உயர் சாதியினரையே இந்த இட ஒதுக்கீடு பாதிக்கும். உண்மையிலேயே பொருளாதார ரீதியில் கீழ் மட்டத்தில் இருக்கும் உயர் சாதி வகுப்பினர் அதிக வருவாய் ஈட்டும் உயர் சாதியினரோடு போட்டி போடும் நிலை ஏற்படும்.

கடந்த 1992-ம் ஆண்டு இந்திரா ஷாவ்னே வழக்கில், இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டால் பின் தங்கிய வகுப்பினர் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது. சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமே பொருளாதார அளவீட்டை பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வரையறுத்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை தாண்டி, 59.5 சதவீதமாக உயரும்.

எனவே, இந்த மசோதா சாத்தியமில்லாத ஒன்று என்று தெரிந்தும் இதை நிறைவேற்றியுள்ளதில் வாக்கு அரசியலே உள்ளது என்று குற்றஞ்சாட்டுகின்றன எதிர்கட்சிகள்.