சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பள்ளிக் கல்லூரிகளின் இறுதித்தேர்வுகளைத் தவிர அனைத்து தேர்வு களும் ரத்து செய்யப்பட்டுவதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்தன.

அதைத்தொடர்ந்து, தமிழகத்திலும், இறுதித்தேர்வு தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும்,  மறுதேர்வுக்கு  பணம் கட்டிய அரியர் தேர்வு மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்தது.

இதற்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்வரை புகழ்ந்து பேனர்களும், பிளக்ஸ்களும் வைக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், அரியர் விவகாரத்தில், அண்ணா பல்கலைக்கழகம் பிரச்சனை செய்து வருகிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா, தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினையை உருவாக்கி வருகிறார்.  இது தொடர்பாக தனக்கு யுஜிசி கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறினார். ஆனால், உயர்கல்வித்துறை அமைச்சரோ, யுஜிசி அப்படி எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை என்று மறுத்து வந்தார்.

இந்த நிலையில்,  அரியர் தேர்ச்சி தொடர்பாக யூஜிசியிடம் இருந்து  எந்த கடிதமும் வரவில்லை என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்திலும் அரியர் மாணவர்கள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில்,  இது தொடர்பாக  யுஜிசியிடம் இருந்து கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை என்றும், அரசு அறிவித்த படி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் என்றும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், அரியர் தேர்வு  விவகாரத்தில், சூரப்பா தேவையின்றி  பிரச்சினைகளை உருவாக்கி வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டது முதலே, தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படுவதால், பொறியியல் கவுன்சிலிங் உள்பட உயர்கல்வி தொடர்பான பல்வேறு முடிவுகளை தமிழக அரசே எடுத்து வருகிறது. 

இந்த நிலையில், அரியர் தேர்வு விவகாரத்தை சூரப்பா கையில் எடுத்து, அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட வருகிறது.