சென்னை: சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்தலாம் என்று கூறிய தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்த செய்துள்ளதுடன், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதுடன், தமிழ்நாடு காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி அணிவகுப்பு நடத்தலாம் கூறிய தனி நீதிபதியின் தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த அமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறியிருந்தது.
ஆனால், தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தார். அவரது நிபந்தனைகளில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களைத் தவிர்த்து மற்ற 41 இடங்களி்ல் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்குகள் அல்லது விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்திக் கொள்ள உத்தரவிட்டார்.
நீதிபதியின் இளந்திரையனின் வித்தியாசமான தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. கிரவுண்டுக்குள் நடத்துவதற்கு பெயர் பேரணியா, தமிழ்நாடு தற்போது அமைதியாக இல்லையா, என கேள்வி எழுப்பப்பட்டதுடன், மற்ற கட்சிகளின் பேரணிக்கு எப்படி அனுமதி வழங்கப்படுகிறது, திமுக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும், காவல்துறை ஏவல்துறையாக மாறி உள்ளது என என சரமாரியாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பொங்கியிருந்தனர்.
இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ஏற்க மறுத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், அணிவகுப்பு பேரணியை ரத்து செய்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் 45 மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு விசாரித்தனர்.
அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில், ஒருபுறம் அமைதி பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை என அனுமதி மறுப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதைடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என திமுக அரசை சாடியதுடன், கடுமையான ஒழுங்குகளுடன் பேரணியை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்ட நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அனுமதி வழங்கியதுடன், யார் மனதையும் புண்படுத்தாமுல், கோஷம் எழுப்பாமலும் பேரணி நடத்த வேண்டும் என அறிவுறுத்தியதுடன், ஆர்எஸ்எஸ் மனுமீது தமிழ்நாடு காவல்துறை அதை பரிசீலித்து, அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.