நெல்லை: போதிய பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தி தராததால், உயிரை பணயம் வைத்து, பேருந்திகளில் தொங்கியபடி பயணம் செய்து வருவதாக  பள்ளிக் கல்லூரி மாணவிகள் கூறியுள்ளனர். இந்த சோக சம்பவம், நெல்லை மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதிகளை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தினால், அதை சென்னை போன்ற பெருநகர மக்கள்தான் அனுபவித்து வருகின்றனர். மற்ற நகரங்களில் போதுமான பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். பெண்களுக்கு கல்விச் சலுகைகளை கொடுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் அதிகாரிகள், அவர்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கான வசதிகளை செய்துகொடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதுதான் உண்மை. குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளி கல்லூரிக்கும் செல்லும் நேரங்களிலோ, முடிந்து வீட்டு வரும் நேரங்களில் முறையாக பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை. இதுதொடர்பாக அரசுக்கு பள்ளி மாணவ மாணவிகள் தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும் பல்வேறு கோரிக்கை மனுக்கள்  கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை.

இந்த நிலையில், சென்னை உள்பட பல இடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்துகளில் தொங்கியப்படி ஆபத்தான நிலையில் பயணம் நிலையை நாம் காண்கிறோம். தற்போது அதுபோன்ற நிலைமை பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளிக் கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்துவருகின்றனர். கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் மாணவ, மாணவியர்கள்  பல முறை கோரிக்கை வைத்தும், பேருந்துகள் இயக்கப்படாததால், தாங்கள் இப்படித்தான் படிக்க கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியது இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

திருநெல்வேலி மாநகரில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து பக்கத்து கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில் பயணித்து வருகிறார்கள். ஆனால் சமீப நாட்களாக, பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாகவும், அவ்வாறு இயக்கப்படும் ஒரு சில பேருந்துகள் பேருந்து நிறுத்ததில் நிற்காமல் செல்வதாகவும் மாணவ, மாணவிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கட்டணமில்லா பேருந்து, சாதாரண கட்டண பேருந்துகள் சொர்ப அளவில் பள்ளி கல்லூரி நேரங்களில் விடப்படுகிறது. குறிப்பாக நெல்லை – தென்காசி, நெல்லை – ஆலங்குளம், ராஜவல்லிபுரம், தாழையுத்து, தென்கலம், செழியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகளும் போதிய அளவில் இயக்கப்படுவது இல்லை என்ற ஆதங்கமும் பயணிகள் மத்தியில் உள்ளது. நெல்லை காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ராணி அண்ணா கல்லூரி மாணவிகள்,பேரூந்து வசதி இல்லாததால் கிடைத்த பேரூந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கப்படியே பயணம் செய்த காட்சி காண்போரை காண்கலங்க செய்தது.

பெண்களுக்கு பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம் என பெண்கள் பயன்பெறும் திட்டங்களை கொண்டு வந்த அரசு, பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டும் பயணம் செய்ய கூடுதல் பேருந்து பள்ளி, கல்லூரி வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என நெல்லை மாணவ, மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இயக்கப்படும் பெண்களுக்கான இலவச பேருந்துகளில், காலை மாலை நேரங்களில் அதிக அளவில் அரசு பெண் ஊழியர்களே பயன்படுத்தி வரும் நிலையில், அதை தவிர்த்து, கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அதிக அளவிலான பேருந்துகளை இயக்க அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இனிமேலாவது அரசு கண்விழிக்குமா?