சென்னை:

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சீமான் மற்றும் திரையுலக பிரபலங்களை காணச் சென்ற மன்சூர் அலிகானுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யமாறு, நடிகர் சிம்பு இன்று காவல்நிலையத்துக்கு சென்று மனு கொடுக்க இருப்பதாக கூறி உள்ளார்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கடந்த 20நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 10ந்தேதி சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது, அதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது  நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் காவலர்கள் தாக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சீமான் உள்பட திரையுலகை சேர்ந்தவர்கள்  பல்லாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை காண சென்ற மன்சூர் அலிகானை போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மன்சூரை விடுவிக்க கோரி  நடிகர் சிம்பு நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் , தான் காரணம் இல்லாமல் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டதில்லை மனித நேய அடிப்படையில் ஒரு மனித உரிமைக்காக மனிதாபிமானம் கொண்ட ஒரு மண் வாசனைக் கொண்ட, மதச்சார்பற்ற அரசியல் சார்பற்ற, ஒரு தனி மனிதனை தமிழ் கலைஞனை, அதாவது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களை விடுதலை செய்யக் கோரி கமிஷ்னர் ஆபீஸ் சென்று மனு கொடுக்க இருக்கிறேன்  என்று கூறி உள்ளார்.