சிக்கிம் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட மாட்டாது : சிக்கிம் முதல்வர் உறுதி

Must read

காங்டாக்

சிக்கிம் மாநிலத்துக்கு விதி எண் 371ஏ வின் கீழ் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட மாட்டாது என அம்மாநில முதல்வர் பிரேம்சிங் தமங் தெரிவித்துள்ளார்.

விதி எண் 370 மூலம் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டது தெரிந்ததே.  இதைப் போல் மேலும் சில மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது.    இதில் 371 எஃப் பிரிவின் கீழ் சிக்கிம் மக்களுக்கு உரிமை வழங்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு வருகிறது.   இந்த பிரிவின் கீழ் சிக்கிம் மாநிலம் கடந்த 1975 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

தற்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த விதி எண் 370 விலக்கிக் கொண்டதைப் போல் மற்ற மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்படலாம் என  அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்  வெளியானதையொட்டி சிக்கிம் மாநிலத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  பி எஸ் கோலை என அழைக்கப்படும் சிக்கிம் மாநில முதல்வரான பிரேம்சிங் தமங் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கோலே, விதி எண் 370 ஐ நீக்கியது நாட்டு நலன் கருதி நடந்த மத்திய அரசின் நடவடிக்கையாகும்,   நாங்களும் அதை ஆதரிக்கிறோம்.   ஆனால் விதி எண் 371 எஃப் மற்றும் அதைப் போன்ற விதிகளைக் குறித்து ஏற்கனவே நாங்கள் பாராளுமன்றத்தில் விளக்கம் கேட்டோம்.  அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விதிகள் நீக்கப்பட மாட்டாது என உறுதி அளித்துள்ளார்.

விதி எண் 371 எஃப் என்பது சிக்கிம் மக்களுக்குச் சிறப்பு உரிமை அளிப்பதாகும்.  எனவே இதை நீக்கும் எண்ணம் அரசுக்கு இருக்காது.   இது கடந்த 1975 ஆம் வருடம் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்கும் போது சிக்கிம் மன்னருடன் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானது.

அதே நேரத்தில் டார்ஜிலிங் மக்களின் கூர்க்காலாந்து கோரிக்கைக்கும் சிக்கிம் மாநிலத்துக்கும் தொடர்பு இல்லை.  கூர்க்காலாந்து கோருவது அங்குள்ள மக்களின் உரிமை ஆகும்.  அதற்கு ஒப்புக் கொள்வதும் மறுப்பதும் முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவாகும்.  அந்த பகுதியை சிக்கிம் மாநிலத்துடன் சேர்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article