புதுக்கோட்டை
தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் கல்ந்துக் கொண்ட நிகழ்வுகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர் அவசியம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என பல விதிகளை அனைத்து மாநில மற்றும் மத்திய அரசுகள் கண்டிப்பாக்கி உள்ளன. இந்த விதிகளை மீறுவோருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
இன்று புதுக்கோட்டையில் உள்ள செல்லப்பா நகரில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா திறப்பு விழா நடந்தது. இந்த பூங்காவை மாநில ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் தமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஒருவருக்கு ஒருவர மிக அருகில் நின்றுக் கொண்டு பங்கேற்றுள்ளனர். இது மக்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. இதைப் போல் விஜயபாஸ்கர் கலந்துக் கொண்ட பிடாரி அம்மன் கோவில் திருப்பணி ஆய்வு நிகழ்ச்சி, மற்றும் புதுக்கோட்டையில் பல இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.