– சிறப்பு நிருபர் –

திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சிகள் பல ஆண்டு காலமாக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதை உண்மையாக்கும் வகையிலேயே பல்வேறு நிகழ்வுகள்  தொடர்ந்து அரங்கேறி வருவது அனைவரும் அறிந்ததே…

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவராக கருணாநிதி என்று பதவிக்கு வந்தாரோ அன்று முதல், அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்சியின் நடவடிக்கைகளில் தலையிட்டு வருவதும், இதனால், அண்ணன் தம்பிகளுக்குள் (ஸ்டாலின், அழகிரி) மோதல் ஏற்பட்டு,  தமிழகத்தை ஆளுக்கு பாதி என பிரித்து கோலோச்சியது  ஊரறிந்த விஷயம்.

இப்போது,  கருணாநிதி குடும்பத்தின் 3வது தலைமுறை வாரிசும்,  அதே பாணியில் அரசியலில் காலெடுத்து வைத்துள்ளது. கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது களமிறக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியுடன், திமுக நிர்வாகிகளைக் கொண்டு  ஊர் ஊராக பிரசாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட உதயநிதி, பல இடங்களுக்கு பிரசாரத்திற்கு  சென்ற நிலையில், அந்த பகுதிகளில் உள்ள  முன்னாள் திமுக தலைவர்களின் மகன்களை, குறிப்பாக இளைஞர்களை நண்பனாக்கிக் கொண்டு அரசியல் சதுரங்கம் ஆடத் தொடங்கினார்.

அவரது  ஆட்டத்துக்கு  ஆதரவாக ஸ்டாலின் குடும்பத்தினரும் களமிறங்க வேறு வழியில்லாமல், அப்போது திமுக இளைஞர் அணி மாநில செயலாளராக இருந்த  வெள்ளக்கோவில் சாமிநாதன், தனது பதவியை ராஜினாமா செய்ய மறைமுகமாக அழுத்தம் தரப்பட்டது.  அவரும் வேறு வழியின்றி, இளைஞர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.  அவருக்கு ஒப்புக்கு சப்பானியாக தி.மு.கழக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 4ந்தேதி திடீரென உதயிநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவதாக,  மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகனோ, உதயநிதி வருகையால் திமுக இளைஞர் அணி பிரகாசமாகும் என்று ஒரே போடு போட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலினும் உதயநிதிக்கு முத்தமழை பொழிந்து, இளைஞர் அணி செயலாளர் என்ற மகுடத்தை சூட்டி அழகு பார்த்தார். இது கருணாநிதி குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை தந்தாலும், இதைவிட மேலும் பலம் மிக்க பதவியை  கைப்பற்ற வேண்டும் என ஆவலோடு காத்திருக்கத் தொடங்கினார்கள்.

இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், சென்னையில் உள்ள திமுக இளைஞர்அணி அலுவலகமான அன்பகத்தை கைப்பற்றியதோடு, தனது ஆதரவாளர்களைக்கொண்டு அதை நிரப்பினார். தொடர்ந்து கட்சி கூட்டங்களிலும் அவ்வப்போது கலந்துகொண்டு, ஸ்டாலின் மகன் நான்  என்பதை நிரூபித்து வந்தார்.

அரசியலில் தான் இருப்பதை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது,  அதிமுக அரசை ஏட்டிக்குப் போட்டியாக விமர்சிப்பதும், நக்கல் அடிப்பதுமாக  தனது அரசியல் பயணத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்…

கடந்த  பாராளுமன்ற தேர்தலின்போது, தென்சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியனை வாழ்த்திய உதயநிதி, அவரை அழகான வேட்பாளர் என பொது மேடையிலேயே வர்ணித்தார், இதனால்  தமிழச்சி தங்கபாண்டியன் கூனிக்குறுக, சுதாரித்துக்கொண்ட உதயநிதி, அழகு என்பது தமிழ் மீது அவர் கொண்ட பற்றை சொல்கிறேன் என்று அசடு வழிந்தது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் உதயநிதியின் அரசியலுக்கு அழகான எடுத்துக்காட்டு.

இந்த நிலையில்தான், உதயநிதியை சென்னை மாநகர மேயராக்கி அழகு பார்க்க ஸ்டாலின் குடும்பத்தினர் காய் நகர்த்த தொடங்கினர்.  சென்னை மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால்,  மேயர் பதவிக்கு  உதயநிதியை களமிறக்கி வெற்றிபெற வைத்து,  திமுகவிலும் வலிமையான தலைவராகவும், தலைமைக்கு தகுதியானவர் உதயநிதி என்று மக்களிடையே பிரமிப்பை ஏற்படுத்த  ஸ்டாலின் குடும்பத்தினர் கனவு கண்டுகொண்டிருக்க, எடப்பாடியோ, நானாவது  மாநகராட்சி தேர்தலை நடத்துவதாவது என்று பெப்பே காட்டி, தேர்தலை நடத்தாமலேயே இழுத்தடித்து வருகிறார்.

திமுகவில், ஸ்டாலினுக்கு அடுத்த  வலிமையான தலைவனாக உதயநிதியை உருவாக்க ஸ்டாலின் குடும்பத்தினர் மெனக்கெட்டு வரும் நிலையில், தற்போது, சென்னை மேற்குமாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் திடீர் மறைவால், அவரது இடத்தைக் கைப்பற்ற காய் நகர்த்தப்பட்டு வருவதாக கோபாலபுரம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்பழகன் இடத்திற்கு யாரை கொண்டு வருவது என திமுக மூத்த தலைவர்கள் யோசித்துக்கொண்டிருக்கையில், உதயநிதிக்கு அந்த பதவியைக் கொடுக்க கோபாலபுரத்தில் இருந்து அழுத்தம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெ.அன்பழகன் வகித்து வந்த வலிமையான மாவட்டச் செயலாளர் பதவியை பெற பல மூத்த தலைவர்கள் அறிவாலயத்தில் முகாமிட்டிருக்க, உதயநிதி போட்டியில் குதித்திருப்பது, திமுகவுக்குள் தற்போது தீவிர விவாதமாகியிருக்கிறது.

சென்னை மேற்கு மாவட்டம், திமுகவுக்கு முக்கியமான பகுதி. இந்த பகுதியை கையாளும் நபர் போல்டாகவும், எதற்கும் அஞ்சாத நபராகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் திநகர், தேனாம்பேட்டை போன்ற பகுதிகள் பிரபல வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி. பணம் கொழிக்கும் பகுதியான, இந்த பகுதியை கைப்பற்ற திமுக தலைகளுக்குள் போட்டி தீவிரமாக உள்ளது.

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கோதாவில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஸ்டாலினுக்கு நெருக்கமான செல்வமானவரும் மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து திமுக தலைமை இன்னும் ஒருமித்த முடிவு எடுக்காத நிலையில்தான், கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டுக்குள் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுள்ளது. அதன்படி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்க கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே,  திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதே, திமுக மூத்த தலைவர்களுக்கு பிடிக்காத நிலையில், மூத்த தலைவர்கள் யாரையும் மதிக்காமல் உதயநிதி செயல்படுவது அவர்களிடையே மேலும் ஆத்திரத்தை மூட்டி உள்ளது.

இதுபோன்ற ஒரு சூழலில்தான், கருணாநிதி குடும்பத்தினர், உதயநிதி ஸ்டாலினை மா.செ.வாக முடிசூட்ட வேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக உதயநிதிக்கு  ஆதரவாக செயல்படும் வகையில் பல மாவட்டச் செயலாளர் பதவிகள் மூத்த தலைவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, உதயநிதி ஆதரவாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ள  நிலையில், தற்போது உதயநிதிக்கு மேலும் வலிமையை கூட்டும் வகையில் மா.செ. பதவி வழங்கியாக வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக புலம்புகிறார்கள் உடன் பிறப்புகள்…

பொறுத்திருந்து பார்ப்போம்…