சென்னை:

சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 42,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23,409 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 18,878 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உக்கிரமாக இருக்கிறது. சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி, 30,444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினமும் சராசரியாக 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமை வார்டுகளில் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கொரோனாவை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 277 பேர் மாயமாகி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தவறான முகவரி மற்றும் செல்ஃபோன் எண்களை கொடுத்துவிட்டு, 277 பேர் மாயமாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி அளித்த பட்டியலைவை வைத்து, சைபர் கிரைம் உதவியுடன் மாயமான அந்த 277 பேரையும் தேடும் முயற்சியில் சென்னை மாநகர காவல்துறை ஈடுபட்டுள்ளது.