சட்டசபையில் ஜெயலலிதா படம் கூடாது: தலைவர்கள் கண்டனம்!

 

சென்னை,

மிழக சட்டமன்றத்திற்குள் ஜெயலலிதா படம் திறக்கக்கூடாது என்று பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனனும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது படத்தை சட்டமன்றத்தில் திறக்க இருப்பதாகவும், அதை திறந்துவைக்க பிரதமர் மோடி வர வேண்டும் என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தபோது கேட்டுக்கொண்டதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து, ஊழல் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப் படத்தை திறந்து வைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது என்று பாமக, காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக சட்டப்பேரவைக் கூடத்தில் ஜெயலலிதா உருவப்படத்தைத் திறந்து வைக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் நாளில் நடத்துவதற்கு தயாராக இருப்பதால், படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஊழல் குற்றவாளிக்கு புகழ் மகுடம் சூட்ட நடைபெறும் இந்த முயற்சி மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வராகப் பணி செய்தவர்கள் அனைவரின் படத்தையும் சட்டப்பேரவைக் கூடத்தில் திறந்து வைத்து மரியாதை செலுத்துவது மரபாக உள்ளது. ஜெயலலிதா நேர்மையான முதல்வராக இருந்திருந்தால் அவரது படத்தை சட்டப்பேரவைக் கூடத்தில் திறப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை.

ஆனால், ஜெயலலிதா நேர்மையான முதல்வராகவும் இல்லை. பேரவைக் கூடத்தில் படத்தைத் திறந்து வைக்கும் அளவுக்கு எதையும் சாதிக்கவும் இல்லை. மாறாக முதல்வராக இருந்த போது, வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒருவரின் உருவப்படம் பேரவைக் கூடத்தில் திறக்கப்படுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

தமிழக சட்டப்பேரவைக் கூடத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், ராஜாஜி, அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இணையாக ஜெயலலிதாவின் படத்தை திறப்பது அந்தத் தலைவர்களுக்கு செய்யப்படும் அவமரியாதை ஆகும்.

இந்த முயற்சிக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி துணைபோகக் கூடாது. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவ தில்லை என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசும் இப்படி ஒரு வரலாற்றுத் தவறை செய்வதைக் கைவிட வேண்டும்”

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். சட்ட சபையில் ஜெயலலிதா படத்தை திறக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தவறான செயல்.

கோர்ட்டால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்ட சபையில் திறக்கலாமா? அவ்வாறு செய்யக்கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் ஐ.ஜி. அலுவலகங்களில் வீரப்பன், ஆட்டோ சங்கர் போன்றவர்களின் படங்களை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி உள்ளது. அப்படி இருக்கும்போது தமிழக அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட முடிவு செய்துள்ளனர். ஒரு குற்றவாளிக்கு எப்படி மணி மண்டபம் கட்டலாம்? இதையும் தவிர்க்க வேண்டும்.

கடந்த சில நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் உண்மை யிலேயே தொகுதி வளர்ச்சிக்காகவோ மக்களுக்காகவோ சந்திக்கவில்லை. அமைச்சர் பதவி போன்றவற்றை குறி வைத்து சென்று சந்தித்திருக்கிறார்கள்.

கல்வி முறையில் அமைச்சர் செங்கோட்டையன் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளாரே. அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, . அவர்   ‘‘ஒவ்வொரு நாளும் அவர் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே எனக்கு புரியவில்லை’’

இவ்வாறு அவர் கூறினார்.


English Summary
Should not keep the Jayalalithaa photo inside the lesilative Assembly campus, PMK Leader Ramdos and former TNCC leader EVKS Elangovan condemned