சென்னை:
மிழகத்தில் கடைகள் திறந்து இருக்கும் நேரத்தை இரவு 9 மணி வரை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் 6வது கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் கடைகள் திறக்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கடைகளை திறந்திருக்கும் நேரத்தை இரவு 9 மணி வரை நீட்டிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழக அரசுக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
சென்னை கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய வணிக வளாகங்களில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை வணிகத்தை, உரிய கால நிர்ணயம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, உடனடியாகத் திறக்க அனுமதிக்க வேண்டும்.
பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பொது முடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து, வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஏற்கெனவே பொது முடக்கத்தின்போது சீல் வைக்கப்பட்ட கடைகள், எவ்வித நிபந்தனையுமின்றி திறக்க அனுமதிக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் வணிகர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், எவ்வித நிபந்தனைகளும் இன்றி திரும்பப் பெறப்பட வேண்டும்.
குறிப்பாக, தமிழகத்தில் இன்னும் இயங்குவதற்கு அனுமதி அளிக்காத தொழில்களான திருமண மண்டபங்கள், நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், சுற்றுலாத் துறை சார்ந்த தொழில்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதிக்கவேண்டும்.
இந்தத் தொழில்கள் அனுமதிக்கப்படாததால், அதன் உரிமையாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான துணைத் தொழில் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே இவர்களின் நலன் கருதி, உடனடி நடவடிக்கைகளை எடுத்து, அரசு அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.