க்ரா

ஜி எஸ் டி மற்றும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை எதிரொலியாக தோலினால் செய்யப்பட்ட காலணிகள் விற்பனை 60 %க்கும் மேல் குறைந்துள்ளது.

ஆக்ரா பகுதியில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.   இவைகளில் பெரும்பாலானவை தோலினால் செய்யப்பட்ட காலணிகளை உற்பத்தி செய்து வருகின்றன.    அத்துடன் குறைந்த அளவில் தோலினால் செய்யப்பட்ட பிற பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.   இங்குள்ள தோல் உற்பத்தியாளர்கள் இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதில் கலந்துக் கொண்டவர்கள் தற்போதைய காலணி விற்பனை பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.   ஆக்ரா காலணி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ககந்தாஸ் ரமணி, “ஆக்ராவில் மட்டும் 75%க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.   இதற்கு முன்பு பணமதிப்பீட்டுக் குறைப்பு நடவடிக்கை இந்த தொழிலுக்கு ஒரு பெரும் தாக்குதலை அளித்தது.   தற்போது ஜி எஸ் டி அமுலாக்கம் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.   நாட்டின் காலணி தேவையில் 65% பங்களிப்பும்,  ஏற்றுமதியில் 25% பங்களிப்பும் இந்த தொழிற்சாலைகள் செய்து வந்தன.  ஆனால் தற்போது விற்பனை 60% குறைந்துள்ளது எங்களுக்கு கவலை அளிக்கிறது. “ எனக் கூறினார்.

ஆக்ரா காலணி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் புரன் தவார், “தோல் என்பது ஆடம்பர பொருள் அல்ல.  அது காலணியில் உபயோகப்படுத்தப் படுவது.   ஜி எஸ் டி தற்போது தோலுக்கு ஜி எஸ் டி 18% ஆக உள்ளது.  இவைகளை திருத்தி 5% ஜி எஸ் டி என வசூலிக்கப்பட்டால் உற்பத்தியாளர்களுக்கு பலன் அளிக்கும்.   அதே போல உற்பத்தியான காலணிகளுக்கு ரூ.1000க்கு குறைவான காலணிகளுக்கு 12% ஆகவும், ரூ.1000 க்கு மேற்பட்ட காலணிகளுக்கு 18% ஆகவும் உள்ளது.  இதையும் 5% ஆக குறைப்பது இந்த தொழில் மேம்பட மிகவும் உதவும்.   அது மட்டுமின்றி ரூ.500க்கு குறைவான விலை உள்ள காலணிகளுக்கு வாட் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.  தற்போது 5 % ஜி எஸ் டி வரி விதிக்கப்படுகிறது” எனக் கூறி உள்ளார்.

அத்துடன் தவார் ஜி எஸ் டி யின் ரிஃபண்ட் தொகைகள் ஏழு நாட்களுக்குள் திரும்ப அளிக்கப்படுவதாக கூறினாலும் நான்கு மாதங்களாக திருப்பி தரப்படாததால் பல தொழிற்சாலைகள் நடத்தப் பணம் இன்றி மூடப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.