இளையராஜா – எஸ்பிபிரச்சினையில் ஊரே இரண்டு பட்டுப் போயிருக்கிறது. முக நூல் – டிவிட்டர் – தொலைக்காட்சி விவாதங்கள் என திரும்பிய திசையெங்கும் இதே பேச்சாக இருக்கிறது. இரட்டை இலை முடக்கப்பட்ட விவகாரம் சூடுபிடித்த பிறகும் இந்த பாடல் குறித்த விவாதங்கள் தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன.

இளையராஜாவுக்கும் எஸ்பிபிக்கும் என்ன பிரச்சினை? இருவரில் யார் பக்கம் நியாயம்? காப்பிரைட் என்றால் என்ன? பென் டிரைவில் பாடல்களை பதிவேற்றி கேட்பதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வருமா? – இப்படி பல கேள்விகள் அனைவருக்கும் எழுந்துள்ளன.

இன்னொரு புறம், தங்கள் திறைமை, அறிவு, உழைப்பு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியின்றி தவிக்கும் படைப்பாளர்கள் இருக்கிறர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவை குறித்து அனைத்து தகவல்களையும் சொல்லப்போகிறது

இந்த குறுத்தொடர். பல ஆண்டுகளாக படைப்புத்துறையில் இருக்கும் ஜாம்பவான் ஒருவர்  தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல்  “நியோகி” என்ற பெயரில்  அதிரவைக்கு் உண்மைகளை எழுதுகிறார்.

அதிர்ச்சிகளுக்கு தயாராக இருங்கள்..


ளையராஜா – எஸ்பிபி ப்ரச்சினையில் ஊரே இரண்டு பட்டுப் போயிருக்கிறது. முக நூல் – டிவிட்டர் – தொலைக்காட்சி விவாதங்கள் என திரும்பிய திசையெங்கும் இதே பேச்சாக இருக்கிறது. இது பல வருடங்களாக புகைந்து கொண்டிருந்ததுதான். இப்போது ஊரறிய வெடித்திருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்குப் பின்னால் ஒரு மர்ம ஸ்தாபனம் இருக்கிறது. IPRS எனப்படும் அந்த நிறுவனத்தின் ஊழல்கள் சர்க்காரியாவையே திக்குமுக்காடச் செய்யும் நுணுக்கப்பாடுகள் நிறைந்தது. இந்த அமைப்பினால் பாதிக்கப்பட்டதாக வெளியே தெரியும் கலைஞர்களின் எண்ணிக்கை அதோடு நிற்கவில்லை !

ஆம், காக்கா வடை கதையில்…ஐயோ பாவம் காக்காவை நரி ஏமாற்றி விட்டது என்பார்கள். உண்மையில் வடைக்கு சொந்தக்காரியான பாட்டிதான் அவலத்துக்கு ஆளானவள்.  ஆனால், அவள் ஏழை என்பதால் கவனத்தில் இருந்து எளிதாக அப்புறப்படுத்தப்படுகிறாள்.

அப்படித்தான் இப்போது நடக்கும் ராயல்ட்டி பஞ்சாயத்தில்… விவாதத்துக்கே வராமல் ஒரு முக்கியமான வர்க்கம் சத்தமில்லாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார்…? நடக்கும் அநீதி என்ன என்பதைப் பார்க்கும் முன்னர்…வேறு சில விஷயங்களை பார்த்து விடலாம்.

இன்றைய ப்ரச்சினையின் அடி நாதம் என்ன..? படைப்புரிமை ! வெளி நாடுகளில் மிகக் கவனமாக கற்போடு போற்றப்படும் இந்த சட்டம் இந்தியாவில் என்ன கதியில் இருக்கிறது என்று பார்ப்போம் !

சட்டம் என்ன சொல்கிறது…?

ஒரு பாடலுக்கு உரிமையாளர் மூவர்.

1. பாடலாசிரியர் ( Author)

2.  இசையமைப்பாளர் ( Composer )

3. வெளியீட்டாளர் ( Music Publisher )

கவனியுங்கள்,  இதில் பாடகர் அடங்கவில்லை. படைப்பாளிகள் என்பவர்கள் வேறு, பர்ஃபார்மர்ஸ் என்பவர்கள் வேறு என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் !

காலம் காலமாக இருக்கும் அதே ஏழு ஸ்வரங்களில் நீந்தி, ஒரு புதிய ட்யூனைப் கண்டுபிடிக்கிறார் இசையமைப்பாளர். அதே போல, காலம் காலமாக எழுதப்பட்டு தீர்ந்த மொழியில் மூழ்கி புதிய சிந்தனைகளை கோர்க்கிறார் பாடலாசிரியர்.

ஆகவே, இருவரும் “படைப்பாளர்கள்” என்னும் கௌரவத்துக்கு உரித்தாகிறார்கள்.

ஆனால், பாட வரும் பாடகர் அங்கே படைக்கும் தொழிலை மேற்கொள்ளவில்லை ! மாறாக, மேற்கண்ட இருவரும் படைத்ததை தன் குரலில் வெளியிடுகிறார். அவ்வளவே !

“ட்ரமாட்டிக் வாய்ஸ்” அல்லது “ஸ்க்ரீன் வாய்ஸ்” என்பதெல்லாம் அந்த பாடகருக்கு ஒரு ப்ளஸ். மற்றபடி, இசையமைப்பாளரைப் பொறுத்த வரையில் பாடகரின் குரல் என்பது மற்றொரு தேர்ந்த இசைக்கருவி போல் தான்.

ஆனால், மேற்குலகத்தில் விஷயம் வேறு !

மைக்கேல் ஜாக்ஸன் – மடோனா போன்றவர்கள் தாங்களே எழுதி – இசையமைத்து – இசைக் கோர்வைகளை சேர்த்து – அதை வருடக் கணக்கில் உருப்போட்டு… கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, பின்பு அதை மேடையேற்றி வெற்றி காண்பார்கள். அப்படிப்பட்டவர்களை படைப்பாளிகள் என்று நாம் போற்றலாம் ! நிச்சயம் அவர்கள் அந்த கௌரவத்துக்கு உரியவர்கள் ! ஆனால், நம்ம ஊர் பாடகர்களை இந்த வகையில் சேர்க்க முடியாது ! ஒருவேளை, என் சொந்த கம்போஸிஷனை பாடுகிறேன் என்று இவர்கள் களமிறங்கி வெற்றி பெற்றுக் காட்டினால் ஏற்றுக் கொள்ளலாம்!

கங்கை அமரன் சொல்வது போல, “உன்னிடம் என்ன காசா இல்லை…? இப்படித்தான் சோறு திங்கணுமா…” என்னும் காழ்ப்பு சுமந்த அவதூறுகள் எல்லாம் முறையான விவாதக் கணக்கில் அடங்காது. எஸ்.பி.பி யிடம் இல்லாத பணமா..? மக்களுக்காக அவரை இலவசமாக பாட சொல்வாரா…? என்ற கேள்விக்கெல்லாம் அவரிடம் பதிலிருக்காது.

ஒன்று உங்கள் சொந்த உழைப்பில் ஓர் புதுப் படைப்பை செய்து, அதை விற்றுக் கொள்வது நல்லது ! அப்படி இல்லையென்றால், படைப்புக்கு உரியவருக்கு,  உரிய மரியாதையை செலுத்தி விடுவதுதான் அழகு !!

இந்த நியாயத்தை மறுத்து, “உங்கள் பாடல்களை வேண்டுமானால் நான் பாடாமல் இருந்து கொள்கிறேன்…” என்பது மாட்சி உடைய செயலாகாது. படைப்பாளியோடு பகிர்ந்து உண்ண மாட்டேன் என்று பச்சையாக சொல்வது மானுடத்துக்கு எதிரானது. அதை ஆதரிக்க முடியாது. கூடாது.

சரி, இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும் !

ஐ.பி. ஆர்.எஸ் என்றால் என்ன என்பதை பார்த்து விடலாம்.

(அடுத்த அத்தியாத்தில்…)

 

அத்தியாயம் இரண்டு:

 

அதிர்ச்சி: இளையராஜாக்களை ஏமாற்றும்  ஐ.பி.ஆர்.எஸ். & பி.பி.எல்.!: நியோகி