சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், ப்ரைன் லாரா உள்ளிட்ட உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தவர் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.

ராவல்பிண்டியில் பிறந்த சோயப் அக்தர் 1997 முதல் 2011 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார்.

100 கி.மீ. வேகத்துக்கு மேல் பந்துவீசும் உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய இவர் மணிக்கு 161.3 கிமீ. வேகத்தில் வீசிய பந்து தான் இன்றுவரை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக வீசப்பட்ட பந்து என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பந்துவீச்சு மூலம் 19 வீரர்களை ரிட்டையர்டு ஹர்ட் முறையில் மைதானத்தை விட்டு தலைதெறிக்க ஓடவிட்ட இவர் கிரிக்கெட் வீரர்களால் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்றே அழைக்கப்பட்டார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர் 2011ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது அச்சு அசலாக சோயப் அக்தரைப் போன்ற உருவ அமைப்பு மற்றும் பந்துவீசும் ஸ்டைலுடன் மற்றொரு வீரர் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

ஓமன் நாட்டு கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள முகமத் இம்ரான் தான் அவர், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே இதுவரை விளையாடி வரும் அவரது சாயல் மற்றும் பந்துவீசும் பாணி ஆகியவை சோயப் அக்தரைப் போன்று உள்ளதால் அவரைப் பற்றிய பேச்சு கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சோயப் அக்தர் 2.0 என்று பெயரிடப்பட்டுள்ள முகமத் இம்ரான் சர்வதேச போட்டிகளில் இதுவரை பங்கேற்க வில்லை என்ற போதிலும் அவரது வீடியோ பேட்ஸ்மேன்கள் மத்தியில் ‘பிகில்’ அடித்துள்ளது.