மும்பை: மராட்டிய சட்டசபைத் தேர்தலையொட்டி, சிவசேனா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரின் மகனும், வருங்கால முதல்வராக அக்கட்சியினரால் முன்னிறுத்தப்படும் ஆதித்யா தாக்கரேவும்.

இத்தேர்தல் அறிக்கையில் பெண் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விவசாயிகளின் நலன் குறித்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிவசேனா தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களாவன; பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு இலவச கல்லூரிக் கல்வி, 15 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி, வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காக, நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.10000 உத்திரவாத வருமானம், விட்டு உபயோக மின் கட்டணத்தில் 300 யூனிட்டுகள் வரை 30% தள்ளுபடி போன்ற பல கவர்ச்சிகரமான அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 1 ரூபாயில் மருத்தவப் பரிசோதனை செய்துகொள்ள, மாநிலம் முழுவதும் 1 ரூபாய் கிளினிக் திறக்கப்படும் என்றும், 10 ரூபாயில் முழு சாப்பாடு என்ற இதர கவர்ச்சிகர அம்சங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் ஆரே வனப்பகுதி குறித்த அம்சம் ஏன் இடம்பெறவில்லை என்று கேட்கப்பட்டபோது, இது மாநில அளவிலான அறிக்கை என்றும், குறிப்பிட்ட பகுதிவாரியான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார் அக்கட்சியின் யுவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே.