ஸ்ரீநகர்: கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மத்திய அரசால், ஹரி நிவாஸ் விருந்தினர் இல்லத்தில், சிறைவைக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா, 68 நாட்கள் கழித்து, முதன்முறையாக தனது 2 மகன்களையும் சந்தித்துள்ளார்.

ஸமீர் மற்றும் ஸாகிர் என்ற பெயருடைய தனது இரண்டு மகன்களுடன் பலமணி நேரங்களை ஒமர் அப்துல்லா செலவு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை, ஒமர் அப்துல்லாவின் தாயார் மோலி அப்துல்லா, லண்டனிலிருந்து கடந்த மாதம் திரும்பிய பிறகு தனது மகனை சென்று சந்தித்தார்.

மோலி அப்துல்லா, தனது நோயுற்ற கணவர் ஃபரூக் அப்துல்லாவுடன், அவர் சிறைவைக்கப்பட்டிருக்கும் இல்லத்திலேயே வசித்து வருகிறார். காஷ்மீரின் முதல்வராக பலமுறையும், தேசியளவில் புகழ்பெற்ற தலைவராகவும் விளங்கிவரும் ஃபரூக் அப்துல்லாவை, மோடி அரசு பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்றதொரு கொடுமையான சட்டத்தில் அடைத்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு பிராந்தியத்தைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள், ஃபரூக் மற்றும் ஒமரை சந்தித்தப் பின்னர், இந்த குடும்ப சந்திப்பு நிகழ்ந்துள்ளது. எப்போதுமே முகத்தை மழித்து பளபளப்பாக காட்சித்தரும் ஒமர் அப்துல்லா, தொடர்ந்த சிறைவாசத்தால், தாடிவைத்து சோகமாக காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.