பெங்களூரு: மூத்த காங்கிரஸ் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வருமாகிய பரமேஷ்வராவின் சொத்துக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை அடுத்து, பரமேஷ்வராவின் தனி உதவியாளராகப் பணிபுரிந்துவந்த ரமேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பரமேஷ்வராவின் வீட்டில் சோதனை நடந்தபோது, ரமேஷ் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. சோதனை முடிந்த சில மணிநேரங்களில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ், முன்னாள் முதல்வர் பரமேஷ்வராவின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் உடல் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஜனா பாரதி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார் பரமேஷ்வரா.

முன்னதாக, கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் பரமேஷ்வரா. பின்னர், பரமேஷ்வரா தான் துணைம முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் தனது தனி உதவியாளராக ரமேஷைப் பணியமர்த்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கு முன்னதாக ரமேஷ் ஒரு கடிதம் எழுதி வைத்ததாகவும், அதில் தனது குடும்பத்தை துன்புறுத்த வேண்டாமென வருமான வரித்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.