மும்பை: சாதாரண பொதுமக்களின் சேமிப்புப் பணத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள், வாராக்கடன் விஷயத்தில் ஏழை – பணக்காரர் இடையே தொடர்ந்து பாரபட்சமாக செயல்பட்டு வருவது கவனத்திற்குரியதாக மாறியுள்ளது.

சமீபத்தில், தன்னிடம் ரூ.100 கோடிகளுக்கு மேல் கடன்வாங்கி, திரும்ப செலுத்தப்படாத சுமார் 220 கணக்குகளைச் சேர்ந்த ரூ.76,600 கோடியை (சாதாரண மக்களின் சேமிப்பு) தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ.

இவ்வளவு பெரிய கடன்களை வங்கி மேலாளர்களின் உதவியுடன் எளிதில் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் போய்விடும் பணக்காரர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் வங்கிகள், ஒரு சாதாரண நபர் சில ஆயிரங்கள் வாங்கியிருந்து, ஒரு மாதத் தவணைத் தொகையை செலுத்தத் தவறினாலும், வசூல் ஏஜெண்டுகளை அனுப்பி அந்த நபரை அணுகும் விதமே வேறானது.

ஆனால், பெரும் பணக்காரர்கள் தொடர்ச்சியாக வங்கிகளை பல நூறு மற்றும் பல்லாயிரம் கோடிகள் என்ற பெரிய தொகைகளில் தொடர்ச்சியாக வங்கிகளை எளிதாக ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் போலி ஆவணங்களைக் கொடுத்து கடன்களைப் பெற்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

சில ஆயிரம் கடன்களைப் பெறும் சாமான்யர்களின் ஆவணங்களை மிகவும் தீவிரமாக அலசும் வங்கிகள், நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்குவோரது ஆவணங்களை சரியாக அலசாமல் போவது ஏனோ என்ற கேள்விகள் நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அரசின் முதலாளித்துவக் கொள்கைகளே இதற்கான முக்கிய காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.