மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்-டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் செப். 30 முதல் அக். 2 வரை 31 பேர் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதில் 15 பேர் குழந்தைகள் அதிலும் 24 மணி நேரத்தில் 24 பேர் இறந்தது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த உயிரிழப்பிற்கு மருத்துவமனையில் போதிய மருந்து கையிருப்பு இல்லாததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஹிங்கோலி நாடாளுமன்ற உறுப்பினரும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியைச் சேர்ந்தவருமான ஹேமந்த் பட்டீல் மருத்துவமனைக்கு வந்தார்.

அப்போது அந்த மருத்துவமனையின் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என்று கூறி மருத்துவமனை டீன் டாக்டர் ஷியாம்ராவ் வாக்கோடே-வை அழைத்து கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்தார்.

மேலும், நோயாளிகள் உயிரிழப்பு விவகாரத்தில் டீன் மீது நடவடிக்கை எடுத்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-விடம் வலியுறுத்தப்போவதாகத் தெரிவித்தார்.

இதனால் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். தவிர, மருத்துவமனை டீனை கழிவறையை சுத்தம் செய்யவைத்த விவகாரம் அம்மாநில மருத்துவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் மரணம்… விசாரணைக்கு உத்தரவு…