டில்லி

க்களவையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கூட்டு பாராளுமன்றக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கைக்கு பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு அளித்துள்ளது.

ரஃபேல் விமானம் கொள்முதல் செய்ய நடந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் பாஜக அரசு அதை மறுத்து வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதைர்த்து பாஜக முன்னாள் தலைவர்கள் மறு சீராய்வு மனு அளித்துள்ளனர்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கூட்டு பாராளுமன்றக் குழு விசாரணை நடத்த வேண்டும் என வெகுநாட்களாக காங்கிரஸ் கோரி வருகிறது. தற்போது அந்த கோரிக்கைக்கு பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனாவும் ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் இதை சிவசேனாவின் உறுப்பினர் அரவிந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் சாவந்த், “நாம் வெளிப்படையாக இருக்கும் போது எதற்கு பயப்பட வேண்டும்? நமது அரசு நல்ல அரசு, ஊழலற்றது என்றால் நமக்கு பயம் எதற்கு? உடனடியாக கூட்டு பாராளுமன்றக் குழுவை அமைத்து உண்மையை வெளிக் கொணர தயக்கம் வேண்டாம். முந்தைய ராஜிவ் காந்தி ஆட்சியின் போது வாங்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது.

அப்போது நாம் போபர்ஸ் ஒரு நல்ல பீரங்கி எனவும் ஆனால் ஊழல் நடந்துள்ளதால் கூட்டு பாராளுமன்றக் குழு விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். அதைப் போலவே இப்போதும் ரஃபேல் நல்ல விமானம் ஆனால் ஒப்பந்தத்தில் ஊழல் உள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆகவே கூட்டு பாராளுமன்றக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறி உள்ளார்.