டெல்லி: மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பு வகித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி  சிவ்தாஸ் மீனா மீண்டும் தமிழக அரசுப்பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அவருக்கு விரைவில் உயர்ந்த பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனிச் செயலாளராக பதவி வகித்தவர் சிவ்தாஸ் மீனா . இவர், விருப்பத்தின் பேரில் மத்திய அரசு பணிக்கு சென்றார். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் 2வது தனிச் செயலாளர் பொறுப்புடன் கூடுதல் பொறுப்பாக பொதுத்துறை பொறுப்பையும் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் கவனித்து வந்தார். இவர்,  மூத்த ஐஏஎஸ்  கடந்த 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம் தேதி மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருவதுடன், மத்தியஅரசுக்கு சென்ற பல முக்கிய அதிகாரிகளை மீண்டும் தமிழகத்திற்கு அழைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிவ் தாஸ் மீனா, ஐ.ஏ.எஸ்-ஐயும் தமிழகஅரசு பணிக்கு மாற்ற மாநில அரசு சார்பில் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதுகுறித்து மத்திய அமைச்சரவையில் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது.  இதன் காரணமாக சிவ்தாஸ் மீனா விரைவில் தமிழக அரசு பணிக்கு திரும்ப இருக்கிறார். அவருக்கு தமிழக உள்துறை செயலாளர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் உள்துறை செயலாளராக  நிரஞ்சன் மார்டி  இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.