பாட்னா: பீகாரின் முசாஃபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் முறைகேடுகளில் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட பாரதீய ஜனதாவின் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா, தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் கவலையின்றி ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; பீகார் மாநிலத்தின் முசாஃபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் முறைகேடுகள் இந்தியாவையே உலுக்கியது. அந்த விவகாரத்தில், நிதிஷ்குமார் அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பாரதீய ஜனதாவின் மஞ்சு வர்மா குற்றம் சாட்டப்பட்டு, பதவி விலக வைக்கப்பட்டார். அந்த காப்பகத்தில் சிபிஐ சோதனையும் நடத்தப்பட்டது.

மஞ்சு வர்மாவின் கணவர், சந்தேஷ்வர் வர்மா, சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு தொடர்ச்சியாக வந்து செல்பவர். எனவே, கணவனும் மனைவியும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, சில மாதங்கள் தலைமறைவாக இருந்தனர்.

கடைசியில், 3 மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். தற்போது, மஞ்சு வர்மா பெயில் பெற்று வெளியில் வந்திருந்தாலும், அவரது கணவர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.

பகுசராய் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்காக, சமீபத்தில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் மஞ்சு வர்மா.

– மதுரை மாயாண்டி