சமீபத்தில் பேசிய அசாதுதீன் ஓவைஸி, தேர்தலுக்குப் பிறகு, ஒரு பிராந்திய தலைவர்தான் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று பேசியிருந்தார். ஆனால், ஓவைஸியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று அரசியல் விமர்சகர்கள் பலர் அதை மறுத்துள்ளனர்.

இதுதொடர்பான அவர்களுடைய கருத்துக்களின் சுருக்கம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நெருக்கமாக இருக்கும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைஸி, ஒருவேளை சந்திரசேகர ராவை சந்தோஷப்படுத்துவதற்காகக்கூட இதைக் கூறியிருக்கலாம். சமீபத்தில் மாயாவதிகூட, நானும் பிரதமர் வேட்பாளர்தான் என அறிவித்திருந்தார்.

பொதுவாக, எந்த ஒரு பிராந்தியக் கட்சியின் தலைவரும் மொத்தமாக 40 இடங்களுக்குமேல் வெல்வதில்லை. அதுவும், இப்போதைய தேர்தல் சூழலில், அக்கட்சிகளுக்கு தனிப்பட்ட முறையில், அந்த எண்ணிக்கை பெரிய சவாலான ஒன்றே.

நிலைமை இவ்வாறு இருக்கையில், தாம் எப்படியும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என நினைப்பது, தேவகெளடா மற்றும் குஜ்ரால் போன்றோரை மனதில் நினைத்துதான்.

அதாவது, எந்தவகையிலும் 5 ஆண்டுகாலம் பிரதமர் நாற்காலியில் அமர முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும், அவர்கள் ஏங்குவது அந்த சிலநாள் பந்தாவிற்குத்தான். முன்னாள் பிரதமர் என்ற வரிசையில் எப்படியும் இடம்பிடித்துவிட வேண்டுமென்ற அடக்க முடியாத ஆசையில்தான்..!

ஆனால், நிலைமை 1996ம் ஆண்டைப்போல் மாறும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இப்போதைக்கு இல்லை. நரேந்திரமோடியைப் பற்றி நமக்கெல்லாம் தெரியும். ராகுல் காந்தியை எடுத்துக்கொண்டால்கூட, சில சில இடங்களுக்காகக்கூட, தேர்தல் கூட்டணியை கைகழுவும் நிலையில்தான் அவர் இருக்கிறார். எனவே, இவர்களில் யாரேனும் ஒருவர், ஒரு பிராந்திய தலைவருக்கு பிரதமராகும் வாய்ப்பை வழங்குவர் என்பது நடக்காத விஷயம்.

கடந்த 1996ம் ஆண்டில் இருந்த காங்கிரஸ் நிலைமையே வேறு. எனவே, பிராந்திய தலைவர்கள் தங்களுக்குள் மனக்கோட்டை கட்டிக்கொள்வது அவர்களின் விருப்பம். ஆனால், ஒருபோதும் அந்தக் கோட்டையில் வீற்றிருந்து கோலோச்ச முடியாதென்பதே இப்போதைய நிதர்சனம்..!

– மதுரை மாயாண்டி