சென்னை:

நியூஸ் 18 செய்தி சேனலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது (தொடர்ச்சி)


ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வேறு மாதிரி வெளியில் வரும் செய்திகள் எல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஓரு பொய்யான கருத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். மருத்துவமனையில் இருந்தபோது நான் எப்படி பார்த்துக் கொண்டேன் என்பது எனக்கு தெரியும்.

எனது மனசாட்சிப்படி எனக்கு தெரியும். அவரை பிரிந்த வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும். எப்படி பார்த்துக் கொண்டேன் என்பதை வெளியில் சொல்ல நினைக்கவில்லை (அழுகிறார்).

எங்களது உறவு அப்படி. திமுகவினர் சொல்வது குறித்து கவலையில்லை. இவ்வளவு நாட்கள் எங்களுடன் இருந்த பன்னீர்செல்வம் விசாரணை கமிஷன் போட வேண்டும் என்று கூறியதை நினைத்து தான் வருத்தப்பட்டடேன். இவ்வளவு பச்சை துரோகியாக இருந்திருக்கிறோரே என்று நினைத்து வருத்தப்பட்டேன்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திறந்த புத்தகமாக தான் இருந்தது. ஒரு டாக்டர் அல்ல இரண்டு டாக்டர் அல்ல. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்மஸ் மருத்துவர்கள் வந்தார்கள். எங்களது மனதில் பயம் இல்லை. அதனால் அங்கே இருந்து மருத்துவர்களை அழைத்தோம். எல்லாம் வந்து பார்த்தார்கள். லண்டன் டாக்டர் வந்தார். சிங்ப்பூரில் இருந்து பசியோதெரபிஸ்ட் வந்து அன்று காலை, மதியமும் சிகிச்சை அளித்தார்கள்.

எல்லா மருத்துவர்களும் வந்து பார்த்தார்கள். அவர்களுடன் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தார். அன்று டிவி கூட பார்த்தார். எங்களது டிவியில் வரும் அனுமன் சீரியல்களை பதிவு செய்து கொண்டு வந்து காட்டினேன். அதை பார்த்தார். கறுப்பு வெள்ளை பழைய பாடல்களை பதிவு செய்து கொண்டு வந்து காட்டினேன். சிடி போட்டு காட்டினோம்.

எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். அந்த மாதம் 29ம் தேதி வீட்டிற்கு அழைந்து வரலாம் என்று இருந்தேன். இந்த மாதிரி இருக்கும் போது ஒருவர் இப்படி சொல்வது அரசியலில் விலை போய்விட்டார் என்பதை காட்டுகிறது. எத்தனை கமிஷன் அமைச்சாலும் சரி. என்ன செய்தாலும் நான் கவலைப்படவில்லை.

ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அந்த கட்சியால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்துகிறாரே. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் இல்லையா. பி.எச் பாண்டியன் போன்றவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். அன்று ஜெயலலிதாவை எதிர்த்தார்கள். பொறுப்புக்கு வந்த பிறகு விருப்பு வெறுப்பு பார்க்க கூடாது.

அதனால் அவர்களை திரும்ப சேர்த்தோம். மீண்டும் அதே பாதைக்கு செல்கிறார்கள். மாற்றங்கள் வருவது எங்களை பொருத்தவரை சகஜம். எங்களது தொண்டர்கள், கட்சியினர் அனைவரும் இணைந்த ஒரே குடும்பம் என்கிற ரீதியில் தான் செல்கிறோம்.
ஜெயலலிதாவுக்கு உடல் நிலை பாதித்தவுடன் உடனடியாக பணியில் இருந்த டிஎஸ்பி உதவியுடன் மருத்துவமனை கொண்டு சேர்த்தோம். உரிய நேரத்தில் கொண்டு வந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது அதிகாலை 3 மணி இருக்கம். இது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் தவறானதாகும். எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம்.

எங்களுக்கு கவலை இல்லை. நான் எப்படி பார்த்துக் கொண்டேன் என்பது மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். அதனால் சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை. எத்தனை நெருக்கடி இருந்தாலும் முதல்வராக பதவியேற்று ஜெயலலிதாவின் ஆசியோடு மதிழக மக்களுக்கு அவர் செய்ய நினைத்ததை அந்த வழியில் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.