மருத்துவமனையில் கவுசல்யா
மருத்துவமனையில் கவுசல்யா

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற தலித் இளைஞரும், பழனியை சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். கடந்த மார்ச் 13ம் தேதி உடுமலையில் உள்ள ஜவுளிக்கடைக்கு வந்த சங்கரும் கவுசல்யாவும் பட்டப்பகலில் நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கொலைவெறி கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டனர். இதில் படுகாயமடைந்த சங்கர் சிகிச்சை பலனின்றி பலியானார். . தலையில் வெட்டுப்பட்ட கவுசல்யா, மருத்துவனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு,  சங்கரின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார்.
சங்கர் படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த உடுமலைபேட்டை போலீசார் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட் சுமி, அவரது உறவினர் மதன், மதனின் கூட்டாளிகளான பழனி, மணிகண்டன், திண்டுக்கல்- ஜெகதீசன், அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், பட்டிவீரன் பட்டி- மணிகண்டன் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
இந்த வழக்கில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, உறவினர் மதன் ஆகியோர் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். .இந்த மனு நீதிபதி பி.கலையரசன் முன் இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. “மனுதாரர்கள் சாட்சிகளை கலைத்து விடும் சூழல் உள்ளது. சமூகத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள் உள்ளன. இவற்றால் சமூகத்தில் ஒரு விதத் தாக்கம் ஏற்பட்டு வருகின்றன. சமூக நலனைக் கருத்தில் கொண்டு, இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது” நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உடுமலைப்பேட்டையில் சங்கரின் பெற்றோருடன் வசித்து வந்த கவுசல்யா இன்று காலை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக வரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் கவுசல்யாவின் உறவினர்கள் எதுவும் நெருக்கடி கொடுத்தார்களா என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.