a
சென்னை: தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ஜோஸ்புனூஸ், மேலாளர் சக்திவேல் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகில் கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்கா செயல்படுகிறது.   இங்கு சுற்றுலா பயணிகளை கவர ‘டிஸ்கோ’ என்ற புதுவகை ராட்டினம் புதிதாக அமைக்கப்பட்டது.
நேற்று மாலை பூங்கா நேரம் முடிந்ததும்  இந்த ராட்டினத்தை இயக்கி பார்க்க ஊழியர்கள் திட்டமிட்டனர்.  சுமார் 25 ஊழியர்கள் ராட்டினத்தில் அமர்ந்து இருந்தனர்.
ராட்டினம்  சுழல ஆரம்பித்து, வேகம் அதிகமான போது, திடீரென 3 துண்டுகளாக உடைந்து விழுந்தது.   இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள்  தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் செல்லும் வழியிலேயே மணி என்ற ஊழியர் மரணமடைந்தார். இவர், குன்றத்தூரை அடுத்த புதுநல்லூரை சேர்ந்தவர்.
இந்த விபத்து தொடர்பாக ‘கிஷ்கிந்தா’ நிறுவனத்தின் உரிமையாளர் ஜோஸ்புனூஸ் மற்றும் மேலாளர் சக்திவேல் ஆகிய இருவரையும்  காவல்துறையினர் கைது செய்தனர். கவனக்குறைவாக இருந்த குற்றசாட்டின் கீழ் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.