சென்னை: அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடலுக்கு பிரியா விடை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க-ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரராக தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என கறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (வயது 102)  சென்னையில் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். .அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது முதல்வருடன் வந்திருந்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தா.மோ .அன்பரசன், மக்களவை உறுப்பினர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சங்கரய்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், குரோம்பேட்டை மற்றும் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சங்கரய்யாவின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வந்த நிலையில், தற்போது அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின்அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தோழர் சங்கரய்யா அவர்களின் மறைவு எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது அனுபவமும் வழிகாட்டலும் இன்னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என எண்ணியிருந்த எனக்கு அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு.

சாதி, வர்க்கம். அடக்குமுறை ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.