சென்னை: கோயம்பேடு அருகே செயல்பட்டு வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில், மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில், கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு பகுதியில் கலை அறிவியல் கல்லூரியில் இயங்கி வருகிறது. இங்கு இரண்டாமாண்டு ஆங்கில துறையில் படித்துவரும் மாணவியிடம் ஒருவரிடம், ஆங்கிலத் துறை பேராசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் கல்லூரி முதல்வர் தங்கவேல் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரது சமாதான முயற்சியை மாணவர்கள் கேட்கவில்லை. இதனால் வேறு வழியின்றி கோயம்பேடு பேருந்து நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே கோயம்பேடு சட்டம் -ஒழுங்கு காவல் ஆய்வாளர் குணசேகர், கோயம்பேடு காவல் ஆய்வாளர் சந்திரசேகர், கோயம்பேடு சரக உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பேராசிரியர் தமிழ்செல்வன், போரூர் அருகேமறைந்திருப்பது செல்போன் சிக்னல் மூலம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பெண் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்மீது கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.