சென்னை: திருநின்றவூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் அளித்த புகாரைத்தொடர்ந்து தலைமறை வான பள்ளி தாளார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்து 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தாளளராக உள்ள வினோத் (வயது 34) என்பவர  அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்,  பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவுகளின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தாளாளர் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

இந்த நிலையில்,  பள்ளி தாளாளர் வினோத் பூச்சி மருந்து அருந்தியபடி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் நான் எந்த தவறும் செய்யவில்லை. இது மாணவ-மாணவிகளுக்கு தெரியும் என்று கூறினார். அவரது வீடியோ மற்றும் போன் சிக்னல்களைக் கொண்டு அவர் கோவாவில் இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த காவல்துறையினர்  அவரை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.