கோவை:

காதுகேளாதோர் பள்ளி நிர்வாகிகள் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதால், அங்கு பயின்ற மாணவர்களை கோவை மாவட்டத்திலுள்ள காதுகேளாதோர் பள்ளியில் சேர்க்கும்படி கோவை ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மூன்று இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருகிறார் மாற்றுத்திறனாளியான முருகசாமி. இவர் நடத்தும் பள்ளிகளில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமடைய வைத்ததுடன், அந்தச் சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

இந்தப் புகாரில் பள்ளி நிறுவனர் முருகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து பள்ளியின் அங்கீகாரத்தை மாநில மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் ரத்து செய்தார்.

ஆகவே அங்கு பயிலும் மாணவர்கள் படிக்க முடியாத நிலையில் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களை கோவை மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளி மற்றும் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் சேர்க்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.