சென்னை :

கொரோனா தொற்று எங்கிருந்து, எப்படி, யாரிடம் இருந்து வந்ததென்றே தெரியாமல் பரவிவருவதோடு நோயாளிகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவும் வகையில் ஒரு ரோபோட்டை ரெனால்ட் நிசான் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது.

‘செவிலி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரோபோட் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை எடுத்துச் செல்கிறது, இதனைமருத்துவ பணியாளர்கள் தூரத்தில் இருந்தே கண்காணிப்பதுடன், தேவையான வழிகாட்டுதலையும் தரமுடியும்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இது போன்ற நான்கு ரோபோட்டுகளை சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார்கள். இதன் மூலம், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அவசர தேவை தவிர மற்ற நேரங்களில் நோயாளிகளின் அருகில் செல்லவேண்டிய தேவையை குறைத்திருக்கிறது.

ஏ.டி.எம். சென்று பணமெடுத்தவருக்கு கொரோனா தொற்று, ஆனால் அந்த ஏ.டி.எம். மில் வேறு யாரும் இதற்கு முன்னும் பின்னும் பணமெடுத்தார்களா அவர்களுக்கு கொரோனா இருந்ததா என்பதே யாருக்கும் புரியாத புதிராக கொரோனா தொற்றிக் கொண்டு வரும் வேளையில், கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சேவை செய்யும் செவிலியர்களுக்கு உதவும் இந்த ‘செவிலி’ ரோபோவை வடிவமைத்த இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் அதற்கு துணை நின்ற ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.