தமிழகத்தில் நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 பி.எஸ்சி. நர்சிங் இடங்களுடன் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

இதற்காக ரூ.270.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

கட்டடங்கள், விடுதிகள் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த கல்வியாண்டிலேயே ஏற்கெனவே உள்ள இடத்தைப் பயன்படுத்தி 600 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 60 பி.எஸ்சி. நர்சிங் இடங்களுடன் 7-வது அரசு செவிலியர் கல்லூரியும் தொடங்கப்படுகிறது.

ஏற்கெனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மேலும் 1,925 இடங்கள் சேர்க்கப்படுகின்றன.

இதில் டி.ஜி.என்.எம். (DGNM) படிப்பில் 1,290 இடங்கள், பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 440 இடங்கள், எம்.எஸ்சி. (M.Sc.) நர்சிங் படிப்பில் 75 இடங்கள் மற்றும் போஸ்ட்-பேசிக் (Post-basic) பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 120 இடங்கள் ஆகியவை அடங்கும்.

மொத்தம் 2,585 செவிலியர் கல்வி இடங்கள் உருவாகியுள்ளதாகவும் இதன் மூலம் கிராமப்புறக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நர்சிங் துறையில் பணிபுரியவும், தமிழக மக்களுக்குச் சேவை செய்யவும் வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.