கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என எதிர்கட்சிகளைச் சேர்ந்த இண்டி கூட்டணியைச்சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, நிதிஷ்குமார் கட்சியும்  நாடாளுமன்ற தேர்தலில், பீகார் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேசப்போவது இல்லை என அறிவித்த நிலையில், தற்போது மம்தா பானர்ஜி கட்சியும் அறிவித்துள்ளது.

 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில் கூடியுள்ள 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

United we Stand என்று 26 எதிர்க்கட்சிகளைக்கொண்ட கூட்டணி   பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லாமல், தங்களது நலனை மட்டுமே கருத்தில்கொண்டு, முரண்டு பிடித்து வருவது, எதிர்க்கட்சிகளின், இந்தியாகூட்டணி நாடாளுமன்ற தேர்தல் வரை தாக்குபிடிக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

வரும்  ஏப்ரல்  அல்லது மே மாதத்தில் மக்களவைத் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.  26 கட்சிகளைச்சேர்ந்த இந்த கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. ஆனால், இதன் தொடக்கமே சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி,பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிப்பங்கீடு குறித்து ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால்,  பீகார்,  மேற்குவங்கம், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவில் கருத்து முரண் ஏற்பட்டுள்ளது அதனால் அந்த மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு எட்டப்படுவதில் சிக்கல் நிலவுகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என திரிணமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக அக்கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும்,பாஜக 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எனவே, 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை வழங்க திரிணமூல் காங்கிரஸ் முன்வந்தது.

ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் அதிக தொகுதிகள் கேட்கப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளதால், அக்கட்சிக்கு அதிக தொகுதிகளை வழங்க முடியாது என திரிணமூல் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா கூட்டணிக்கு அடித்தளம் அமைத்த நிதிஷ்குமார் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேறுபாடு காரணமாக நாடாளுமன்ற தேர்தலில், தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேசப்போவது இல்லை என கூறிய நிலையில், தற்போது மம்தாவும் காங்கிரசுடன் பேச மாட்டோம் என கூறியிருப்பது கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வெஸ்ட் பெங்கால் காங் தலைவர்  எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,.  ‘கூட்டணியில் மம்தா தீவிரம் காட்டவில்லை… என்னால் தனித்து போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற முடியும்’ என்று நம்புவதாக கூறினார். மேலும்,  அவர்கள் (பாஜக) தாக்குதலுக்கு (ED) வகுப்புவாத நிறத்தைக் கொடுக்க முயற்சித்த பிறகு நான் ஜனாதிபதி ஆட்சியைப் பற்றி பேசினேன். இருப்பினும், ரோஹிங்கியா குறித்த எனது கேள்விக்கு பாஜகவிடம் பதில் இல்லை’ என்று  தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் கட்சி,  மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பட்சமாக  “இரண்டு இடங்கள்” மட்டுமே தர மடியும் என தெளிவாக தெரிவித்து உள்ளது.   “காங்கிரஸின் உயர்மட்ட தலைமை மம்தா பானர்ஜியிடம் நேரடியாகப் பேசினால், அவர் மேலும் ஒரு இடத்தை விட்டுக் கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கு மேல் முரண்டு பிடித்தால், காங்கிரஸ் உடன் மேற்குவங்கத்தில் கூட்டணி கிடையாது என அறிவிக்க நேரிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தியா கூட்டணியின் United we Stand என்ற வாக்கியத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் கூட்டணி கட்சி தலைவர்களிடம்  எழுந்துள்ளது.

கலகலக்கும் இந்தியா கூட்டணி: காங்கிரசுக்கு எதிரான மன நிலையில் நிதிஷ்குமார்…