டெல்லி: பாஜகவுக்கு மாற்றாக உருவான 26 கட்சிகளைக்கொண்ட இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் முழுமையான ஒருங்கிணைப்பு எட்டப்படாத நிலையில், இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்த பீகார் முதல்வல் நிதிஷ்குமார் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா கூட்டணி சார்பில், வரஇருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் பரவி வரும் நிலையில், கடந்த ஆலோசனை கூட்டத்தின்போது,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக மம்தா, கெஜ்ரிவால் போன்றோர்  பரிந்துரைத்துள்ளதற்கு நிதிஷ்குமார்  அதிருப்தியை வெளியிட்டு இருந்தார்.  இந்த நிலையில் பீகாரில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடந்தப் போவது இல்லை  அறிவித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை 4 ஆலோசனை கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் ஜூலை மாத மத்தியில் பெங்களூரில் நடைபெற்றது. இந்த இரண்டாவது கூட்டத்தில்தான் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் சூட்டப்பட்டது. மூன்றாவது கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு டிசம்பர் 19ந்தேதி 4வது ஆலோசனை கூட்டம்  டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,  காங்கிரஸ் கட்சியிலிருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிஹாரின் முதலமைச்சர் நிதீஷ் குமார், அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஆர்ஜேடியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், உத்தவ் தாக்கரே  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இந்தக் கூட்டணிக்கான இலச்சினையை உருவாக்குவது, ஒருங்கிணைப்பாளர், அமைப்பாளர்களை நியமிப்பது, முறையான கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும்,  எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் குழுக்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் பேசப்பட்டது.

மேலும், பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதுவரை அது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதுபோல  பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி முன்னிறுத்த காங்கிரஸ் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு  மேற்குவங்க முதல்வர் மம்தா உள்பட சில கட்சிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளன. இதனால், அவர்கள் தரப்பில் காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிலைப்படுத்தினர். ஆனால், அவர் அதை ஏற்க முன்வரவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கில் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக மேற்கு வங்கம், பீகார், டெல்லி மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு எழுந்துள்ளது.  அதுபோல   சிவசேனாவுடனும் காங்கிரசுக்கு தொகுதி பங்கீட்டில் முரண்பாடுகள் உள்ளன.  இதனால் இந்தியா கூட்டணியில் முன்னேற்றம் ஏற்படாத நிலை தொடர்கிறது.

இந்தியா கூட்டணி தரப்பில் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க நிதிஷ்குமார் ஆசைப்படுவதாகவும்,  ஆனால், பீகார் முதல்வரை மகிழ்ச்சியாக வைத்திருக்க காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணி உறுப்பினர்களின் தலைவர்கள் பதவியை விட்டுக்கொடுக்க முனைகின்றனர், ஆனால், அது  பிரதமர் வேட்பாளர் என்று அர்த்தம் இல்லை,” என்று என்றும் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என  தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பரபரப்பு  கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அவரது கடிதத்தில்,  இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக ஈடுபடுகிறது. அதற்கு துணை போகும் வகையில் சில கட்சிகளும் ராகுலை பிரதமராக ஏற்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த வேண்டும். அதை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி தேவையில்லை. காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்க வேண்டும். அகில இந்திய கட்சியாக இருந்து கொண்டு மாநிலக் கட்சிகள் வளர காங்கிரஸ் துணைபோக கூடாது என வலியுறுத்தி உள்ளார்.

இது கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,   நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளரும், பீகார் மந்திரியுமான சஞ்சய் குமார்ஷா , நாடாளுமன்ற தேர்தலில், பீகார் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேசப்போவது இல்லை. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

மேலும், தற்போது  எங்களிடம் 16 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் நாங்கள் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த அனைத்து தொகுதிகளிலும் நாங்கள்  மீண்டும் போட்டியிடுவோம் என்றவர், 16 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறி உள்ளார்.

2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் நீடித்து வருவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

நிதிஷ்குமார் கட்சியின் கூட்டணி தொடர்பான தகவல், இந்தியா கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை உருவாக்கி உள்ளது.