கோவை: திமுக எம்.பி. ராசாவின்  இந்து துவேச பேச்சு, என்ஐஏ சோதனை போன்றவற்றால், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பாஜக அலுவலகம், பாஜக தலைவர்களின் வீடுகள், வாகனங்கள்  பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில்பிஎஃப்ஐ கட்சியை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கொங்கு மண்டலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் ஈடுபட்டு வரும் ஒருவரையும், இதுவரை  காவல்துறையினர்கைது செய்யாத நிலையில், கொடி அணிவகுப்பு நடத்தி மக்களிடையே அமைதியை ஏற்படுத்தி முயற்சித்து வருகின்றனர்.

திமுக எம்.பி.யின் இந்து துவேச பேச்சு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் வீடுகளில் என்ஐஏ சோதனை, கோவை மாவட்ட பாஜக  தலைவர் கைது போன்ற வற்றால் கோவை உள்பட அண்டைய மாவட்டங்களிலும் பரபரப்பு நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து, மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில்  அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது வருகின்றன.

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி சிலர் தப்பியோடினர். இந்த பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பதற்றம் அடங்குவதற்குள், துணிக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், கோவையில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பொள்ளாச்சி அடுத்த குமரன் நகரில் உள்ள பாஜக நிர்வாகிகளான கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் சரவணன் ஆகியோர் வீடுகளின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடியுள்ளனர். கார்கள், இரண்டு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மதன்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் சச்சின் ஆகியோருக்கு சொந்தமான ப்ளைவுட் கடைகளிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.  அந்த கடைகளில் உள்ள பிளைவுட்கள் பாதி எரிந்த நிலையில் கிடந்ததை பார்த்த கடையின் உரிமையாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

ஈரோட்டிலும் பாஜக நிர்வாகியின் கடை மீதும் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட் வீசப்பட்டுள்ளன. பாஜகவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, மூலப்பாளையத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் பொறுப்பு வகிக்கும் நிலையில், அவரது கடையிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டுகளை வீசிச்சென்றுள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர் தியாகு கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், கார் சேதமடைந்தது. நேற்று இரவு முதல் பாஜக அலுவலகங்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளதோடு காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் கோவை மாநகர் முழுவதும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு மாநகருக்கும் வரும் நபர்களை கண்காணித்து வருகின்றனர். ஆனால், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக யாரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இதுதொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “கோவை மாநகரில் அமைதியை நிலைநாட்ட, சோதனை சாவடிகள் அமைக்கபட்டு கண்காணித்து வருகிறோம். சோதனை சாவடிகள் இல்லாத இடங்களில் புதிதாக கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம். நகரில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய நபர்களை கைது செய்யவும், தடுப்பு நடவடிக்கைகளுக்காவும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

இதற்கிடையில்,  கோவை வந்த காவல்துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் கோவை மற்றும் திருப்பூர், ஈரோட்டில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தாமரைக்கண்ணன், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகர துணை ஆணையர்கள், நுண்ணறிவு பிரவு ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து,  அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கோவை காந்திபுரம் மற்றும் கரும்புக்கடை பகுதிகளில் அதிவிரைவு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் காந்திபுரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த ஊர்வலத்தை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் வஜ்ரா வாகனத்துடன் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் தொடங்கி கிராஸ் கட் ரோடு வழியாக ராம்நகர்,வடகோவை,நூறடி சாலையை கடந்து மீண்டும் காந்திபுரம் வந்தடைந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மாநகரில் யாரேனும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபடுவார்கள் என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.