சென்னை: காவல்நிலையங்களில் அதிகரித்து வரும் லாக்கப் மரணங்களைத் தொடர்ந்து, கைதானவர்களை  இரவு நேர விசாரணை கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சாதி மதம் தொடர்பான பிரச்சினைகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கிடையில், காவல்நிலையங்களில் லாக்கெட் டெத்களும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி உடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை உதவி ஆய்வாளர் புகழும்,  பெருமாளும் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.  இதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரில் விக்னேஷ் வலிப்பு வந்து இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதுபோல, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டாரனை கிராமத்தை சேர்ந்த தங்கமணி,  சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறி,  கடந்த 29ஆம் தேதி விசாரணைக்காக கலால் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.  இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 27ம் தேதி திருவண்ணாமலை கிளை சிறையில் தங்கமணி அடைக்கப்பட்டார்.  இதைத் தொடர்ந்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தங்கமணி உயிரிழந்தார்.  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும்,  அதன் காரணமாகவே அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.  இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அடுத்தடுத்து விசாரணை கைதிகள் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காவல்நிலையங்களில் விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்தக்கூடா என்று அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  கைதானவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இரவு நேர கஸ்டடி விசாரணை கூடாது  என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.