சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ், சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கு போட்டுதான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று நிபுணர் குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
2020ம் ஆண்டு டிசம்பர் 9–ம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி நசரத்பேட்டை போலீசார், சித்ராவின் கணவர் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவோ, அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை பிப்ரவரி 4–ந்தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.