சென்னை:  தமிழகத்தில் வீடுகள், நிறுவனங்களில் புதியதாக போர்வெல் போட அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த  தமிழகஅரசு திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடைகாலங்களில் ஏற்படும் கடுமையான வறட்சி காரணமாகவும், குடிநீர் வாரியத்தின் தண்ணீர் விநியோகம் குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், சென்னை உள்பட பெரும்பலான பகுதிகளில் நிலத்தடி நீரை பெற போர்வெல் போடப்பட்டு, தண்ணீர் இறைக்கப்படுகிறது.  இந்த நிகழ்வுகள் சென்னை போன்ற நகர்புறங்களில் அதிக அளவில் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், இனி வரும் காலங்களில் வீடுகள், நிறுவனங்களில் போர்வேல் போடுவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டிய நிலை உருவாகும்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதியதாக போர்வெல் போடுபவர்கள், சென்னை மெட்ரோ வாட்டர், பிஎம்டபிள்யு உள்பட குறிப்பிட்ட அரசு துறைகளிடம், விண்ணப்பித்து, அதற்கான அனுமதி பெறும் வகையில்,  மாநிலத்தில் நிலத்தடி நீர் ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முயன்று வருகிறது என்றும், அதுபோல ஏற்கனவே உள்ள போர்வெல் குறித்தும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விவசாய நிலங்களில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கும், ஆழ்துளை போர்வெல் போடுவதற்கும்  மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என ஏற்கனவே தமிழகஅரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.