சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர தடை விதிக்க மறுத்ததுடன், அமைச்சரை பதவியில் இருந்து நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிமீது, கடந்த அதிமுக ஆட்சி மற்றும் தற்போதைய திமுக ஆட்சியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பல புகார்கள் உள்ளன.  இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை,  சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அவரை  கைது செய்து புழல் சிறையில்  அடைத்துள்ளது.  சிறையில் அடைக்கப்பட்ட அவரின் பதவியை பறிக்கா திமுக அரசு, அவரை  இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் வகையில் வைத்து, அவருக்கு மக்கள் பணத்தை வீணடித்து வருகிறது.

ஊழல் செய்த ஒருவரை பதவியில் இருந்து நீடிக்காமல், அமைச்சராக நீடிக்க வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசின் நடவடிக்கை மீது உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமைச்சரவை ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளது. அதுபோன்ற சூழல் நிலவுகிறதா? இல்லையா? என்பதை பார்க்க வேண்டும். சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என முதல்வருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும்,  அதேபோல், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. இந்த விவகாரத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்ட விதிகளின்படிதான் ஆளுநர் செயல்பட்டுள்ளார்” என்று வாதிடப்பட்டிருந்தது.

அதேபோல், ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  “சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது. எனவே அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி முதல் முறையாக எழுந்துள்ளது. தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது” என்று வாதிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  வழக்கு தொடரப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்ததை எதிர்த்துசெந்தில் பாலாஜி,   எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு,  வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் மேல்முறையிடு செய்துள்ளார்.

இந்த மனுவை, நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை  நடத்தியதுடன், செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிக்கத் தடையில்லை என்று உயர் நீதிமன்ற எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாநில அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு சரியானதே என்றும், இதில் தலையிடத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதன் மூலம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் இருந்த சிக்கல் விலகியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

சிறையில் 155வது நாளாக அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு…