டில்லி

முதியோர் பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரக கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உலகில் அறுபது வயதைக் கடந்த முதியோர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.   இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு சமமாக முதியோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது   வரும் 2050ல் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் கால்வாசி பேர் முதியோராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் அவர்கள் ஆதரவற்று விடப்படுவதும் அதிகரித்து வருகிறது.

நாட்டில் உள்ள 20 நகரங்களில் நடத்திய ஆய்வில் சுமார் 32% முதியோர் தங்களது பிள்ளைகளால் கவனிக்கப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டது.  மேலும் 23% பேர் வீட்டினர் புறக்கணிப்பு இருந்த போதிலும் குடும்ப கவுரவத்துக்காக அதைச் சகித்துக் கொண்டு சமாளித்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது.  இந்த மக்களில் 56%பேர் மருமகள்களாலும் துன்புறுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி மத்திய அரசு முதியோர் பாதுகாப்பு சட்ட மசோதாவை இயற்றி அதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.  இன்று அந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரகம் ஒப்புதல் அளித்துள்ளது.   இந்த சட்ட மசோதாவின்படி இந்தியாவிலுள்ள மாவட்டங்களில் மட்டுமல்லாமல் அனைத்து வட்டங்களிலும் மூத்த குடிமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். முதியோருக்கு போதுமான உணவு, இருப்பிடம், உடை, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்டவை தங்களது பிள்ளைகளிடமிருந்து கிடைக்காமல் போனால் அவர்கள் அந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

இந்த ஆணையத்தின் மூலம் அனைத்து குறைகளும் பிரச்சினைகளும் 90 நாள்களில் தீர்வு காணப்பட வேண்டும்.  அவரவர் சொந்த சேமிப்பிலும் வருமானத்திலும் பூர்விக சொத்திலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத மூத்த குடிமக்கள் இந்த ஆணையத்தை அணுகலாம். இந்த ஆணையம் அவர்களது பிள்ளைகள் அல்லது சட்டப்படியான வாரிசுகள் அதிகபட்சமாக ரூ.10,000 வரை வழங்க உத்தரவிட முடியும்.

பெற்றோரைப் புறக்கணிக்கும் வாரிசுகளுக்கு மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை வழங்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. இந்த மசோதா முதியோர்களின் பாதுகாப்புக்காகவும் தேவைக்காகவும் மருத்துவமனைகளையும், முதியோர் இல்லங்களையும் நிறுவ வழி வகுக்கிறது. அத்துடன் மூத்த குடிமக்களின் முழு அனுமதியில்லாமல் அவர்களின் பாதுகாப்பாளர்கள் அவர்களது சொத்துகளை விற்பது தடை செய்யப்படுகிறது.