சென்னை: செங்கம் சிப்காட், காஞ்சிபுரம் பயணியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், தொழிற்பேட்டை, விளையாட்டு மைதானம் உள்பட சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்கு சட்டப்பேரவையில் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவீன தங்கும் விடுதி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். கேள்வி முடிந்ததும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசுகிறார். தனது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய கேள்வி நேரத்தின்போது, செங்கம் தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நிலத்தை கண்டறிய அரசு முன்வர வேண்டும் என  திமுக எம்எல்ஏ கிரி கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, எனது வேலையை விட்டுவிட்டு நான நிலத்தை தேட முடியுமா?  என கடிந்துகொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு விவசாயிகளை பாதிக்காத வகையில், உறுப்பினர்கள் நிலத்தை கண்டறிந்து சொன்னால் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.

சென்னை அருகே செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா..? என்று அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டு வீரர்கள் மைதானங்களை விட உடற்பயிற்சி கூடங்களை அதிகமாக விரும்பு கிறார்கள். அதன் அடிப்படையில், உடற்பயிற்சி கூடம் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டவர் தங்கும் வகையில் பயணியர் விடுதி அமைக்கப்படுமா..? அந்த தொகுதி  திமுக எம்எல் எழிலரசன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,   ஏற்கனவே 25 கோடி செலவில் அங்கு தங்கும் விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அங்கு கிடப்பில் உள்ள தண்ணீர் வசதி கொண்டுவரப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் அது திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆரணி தொகுதி அரியபாடி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைக்கப்படுமா..? என்ற கேள்விக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மாசு விளக்கமளித்தார். அதில், குறைந்தது ஒரு ஊராட்சியில் 30, 000 பேர் வசிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைக்கப்படும். ஆனால், மக்கள் பலன் பெரும் வகையில் கிராமங்களில் நடமாடும் மருத்துவமனை வாயிலாக தற்காலிக கூடாரம் அமைக்கப்படும் என கூறினார்.

அவினாசியில் சிப்காட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், அவிநாசியில் சிப்காட் அவசியமா? இதனால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்களா..?  என கேட்டார்.

இதற்கு பதில்கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசுஇ விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு காரியத்தையும் திமுக அரசு செயல்படுத்தாது. விவசாயிகளை  பாதிக்காத வகையில் சிப்காட் அவினாசியில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.