மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து வருகிறது.

மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நாடு முழுவதும் உள்ள ராஜ்பவன்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகளாக மட்டுமல்லாமல் அதன் ஒரு கருவியாகவே எப்போதும் செயல்படுகிறார்கள்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே எப்போதும் மோதல்கள் ஏற்படுகின்றன. மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா, டெல்லி மற்றும் புதுச்சேரியில் தற்போது இந்த மோதல் அனைவரும் உணரும் வகையில் உள்ளது.

தமிழ் நாட்டில் இந்த மோதல் அமைதியாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் ஆளுநர் இங்கு செயலற்ற தன்மையில் இருப்பது தான்.

மாநில அரசுகளின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறுவதை விட அந்த பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் அதன் பதிப்பாசிரியர் அருண் ராம் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள ராஜ்பவன் எனும் ஆளுநர் மாளிகையில் ஒரு குடும்பத்திற்காக வேலை செய்ய 600 பேர் தேவையா ?

முதலமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதும், தொடக்க அமர்வில் பேரவையில் உரையாற்றுவதும் ஆளுநரின் முதன்மைப் பணியாக இருந்தால், இவற்றை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது பேரவைத் தலைவர் செய்ய முடியாதா ?

பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்களின் பங்களிப்பு மிகவும் மோசமாக உள்ளது,

மத்திய-மாநில உறவை வலுப்படுத்த ‘ஹப் சென்டர்’ போன்ற சிறிய அலுவலகங்களில் இருந்து வேலை செய்யக்கூடிய தொடர்பு அதிகாரிகளே போதும் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் ஆளுநர் எனும் நியமன பதவியை ஒழிக்க வேண்டும் என்ற பழைய ஆலோசனையை மீண்டும் நினைவு படுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் அருண் ராம்.

நீட் விலக்கு மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி காலம் கடத்துவது போல், 2018 ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் விடுதலை குறித்த மசோதாவையும் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கிடப்பில் போட்டிருந்தார்.

பின்னர், உச்சநீதிமன்றம் ஜனவரி 2021 க்குள் இது தொடர்பாக முடிவெடுக்க காலகெடு நிர்ணயித்ததைத் தொடர்ந்து அதை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார் ஆளுநர். ஆனால் இதுவரை இந்த மசோதா குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடும் ஆளுநர் பதவி அவசியமா என்பதை மத்திய அரசு ஆலோசித்து அந்த பதவியை ஒழிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.