சென்னை: தமிழ்ப்புத்தாண்டு அன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழகஅரசு புறக்கணித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அப்போது, மாண்புமிகு ஆளுநருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை எனவும், ஆளுநருடன் எந்த முரண்பாடும் இல்லை  என கூறியவர், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும்  சட்டமுன்வடிவு கிண்டி ஆளுநர் மாளிகையில் 210 நாட்களாக முடங்கி கிடக் கிறது அதன் காரணமாகவே புறக்கணிக்கப்பட்டது.  ஆளுநருக்கு உண்டான மரியாதையை தொடர்ந்து வழங்குவோம்.  நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்?  நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது. நீட் மசோதா குறித்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும். 100 ஆண்டு கண்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடங்கி இருப்பது சரியல்ல.

தமிழ்நாட்டு மக்களுக்கு நலன் கிடைக்கிறது என்றால் நான் வலியையும் அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன். என் கடன் பணி செய்துகிடப்பதே என்கிற வகையில்தான் 50 ஆண்டுகளாக நான் செயல்பட்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையில், தமிழகஅரசின் நடவடிக்கை காரணமாக, நீட்விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.