அமர்நாத் யாத்ரீகள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு மூத்த கூட்டணி கட்சியான பாஜக.வை சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட கவுரக்ஷாக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சமனாவில் தெரிவித்துள்ளது.

இது போன்ற தாக்குதலுக்கு வெறும் காகிதத்தில் மத்திய அரசு கண்டனம் தெரிவிப்பதை விட்டுவிட்டு பயங்கரவாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானை எதிர்கொள்ள 56 இஞ்ச் மார்பு தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பாகிஸ்தானை எதிர்கொள்ள 56 இஞ்ச் மார்பு வேண்டும் என்று மோடி தெரிவித்திருந்தார். மனிதர்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த யாருக்கு தைரியம் இருக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதை விடுத்து காகிதத்தில் கண்டனமும், வருத்தமும் தெரிவிப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது.

காஷ்மீரில் உள்ள அரசு எந்திரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. காஷ்மீர் பிரச்னை ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீர் அரசின் தற்போது வரை உண்மை தன்மை இல்லை. பயங்கரவாதம் மற்றும் வன்முறை மூலம் தீவிரவாதிகள் தான் அங்கு ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

பயங்கரவாதிகளின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 56 இஞ்ச் மார்பு கொண்ட ஒரு அரசு தேவைப்படுகிறது. ௩௭௦வது சட்டப் பிரிவை ஒருவாரத்திற்குள் நீக்கி பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை இந்த உலகுக்கு வலுவான செய்தியை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘ கவுரக்ஷாக்களை அனுப்பி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளோடு சண்டையிட செய்ய வேண்டும். விளையாட்டு, கலாச்சாரத்திற்குள் அரசியலை கொண்டு வரக்கூடாது என்று பாஜக வினர் அடிக்கடி கூறி வருகின்றனர். ஆனால் தற்போது மதம் மற்றும் அரசியல் இணைந்து பயங்கரவாதத்தில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.

இந்த பயங்கராவதிகள் பையில் ஆயுதங்களுக்கு பதிலாக மாட்டு இறைச்சி மட்டும் இருந்திருந்தால் ஓருவர் கூட உயிரோடு இருந்திருக்க முடியாது. மாட்டு இறைச்சி விவகாரத்தில் கவுரக்ஷாக்கள் சீறுகிறார்கள். இவர்கள் ஏன் பயங்ரவாதிகளோடு சண்டையிட செல்லக்கூடாது’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘விழாக் காலங்களில் ஒலி மாசுவை தடுக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் படி கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.