சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை, திமுக வேட்பாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பரவலின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ளது. தமிழகத்திலும் கடந்த ஒரு மாதமாக தொற்று பரவலும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக, அரசியல் பொதுக்கூட்டம், வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு போன்ற காரணங்களால், தொற்று பரவல் மேலும் உச்சம் பெற்று வந்தது. மேலும் மக்களின் அஜாக்கிரதை காரணமாகவும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக  தொற்று பாதிப்புக்கு பல்வேறு வேட்பாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே திமுக எம்.பி. உள்பட பலர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை  பெற்று வீடு திரும்பிய நிலையில், தற்போது  காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்ததை, திமுக வேட்பாளரும், கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில்,  நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,29,26,061  பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நேற்று 3,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிக பட்சமாக சென்னையில்  1,459 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் சிகிச்சையில் இருப்போர்  எண்ணிககை 10,685 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல்முடிவடைந்துள்ள  நிலையில், அடுத்த சில நாட்களில் கொரோனாவுக்கு ஆளாகும்  வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என அஞ்சப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் நோய் பரவலைத் தடுக்கும் வகையில்  சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் சென்னையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.