விஜயேந்திரர் விவகாரம் :  கமலஹாசனுக்கு சீமான் கண்டனம்

Must read

சென்னை

விஜயேந்திரர் பற்றிய  கமலஹாசன் கருத்துக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அமர்ந்திருந்தது நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.   இது குறித்து நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ பாஜகவை சேர்ந்த ராஜா நடத்திய விழாவில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காதமைக்கு  தமிழகமே கொந்தளிக்கிறது.  ஆனால் மதிப்புக்குறிய சகோதரர் கமலஹாசன் அது குறித்து சொல்லிய கருத்துக்கள் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.    தமிழன்னைக்கு மரியாதை செலுத்தும் அடிப்படை மாண்பையும் செய்யாத விஜயேந்திரர் செயலுக்கு ஆதரவாய் கருத்து வெளியிட்டுள்ள கமலஹாசனுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்ட இடத்தில் எல்லாம் தமிழ் வாழ்த்து பாட வேண்டாம் என தெரிவித்துள்ள கமல் எதை கண்ட இடம் எனக் கூறுகிறார்.   எங்கு பாட வேண்டும் என்னும் பட்டியல் கமலிடம் உள்ளதா?    அவர் கூறிய அதே கண்ட இடத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதுக்கு கமல் ஒன்றும் கூறவில்லையே.    ”எழுந்து நிற்பது என் கடமை அமர்ந்திருப்பது விஜயேந்திரர் கடமை” எனக் கூறும் கமல் விஜயேந்திரர் செய்ததை ஆதரிக்கிறாரா?

கண்ட இடத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தை பாடக் கூடாது என சொல்லும் கமலஹாசனுக்கு கண்ட இடத்தில் எல்லாம் தியானம் செய்யக் கூடாது என சொல்லும் தைரியம் உள்ளதா?    ஊழல் நடக்கும் போது மக்கள் தியானத்தில் தானே இருந்தார்கள் எனக் கமலஹாசன் கூறுகிறார்.   கமல் வேண்டுமானால் அப்போது தியானத்தில் இருந்திருக்கலாம்.   ஆனால் மக்கள் போராடிக் கொண்டு தான் இருந்தார்கள்.

கமலஹாசனுக்கு உற்ற நண்பராக இருந்த வைரமுத்துவை வசை பாடும் போது கமலஹாசன் தியான நிலையில் இருந்தது ஏன்?  இப்போது விஜயேந்திரருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது ஏன்?  இதற்கு கமலஹாசன் விளக்கம் அளிக்க வேண்டும்.    தமிழன்னை விஜயேந்திரர் அவமதித்ததை விட கமலஹாசன் அதிகம் அவமதிக்கிறார்.   அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டு மக்கள் மீது பழியைப் போட்டு தன்னை உத்தமராக காட்டிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்”  என கூறி உள்ளார்.

More articles

Latest article