சென்னை: பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் பாதுகாப்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது; அதற்காக சிசிடிவி காமிராக்கள் அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

மாணவிகள், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஆசிரியர்கள், விளையாட்டு துறை பயிற்சியாளர்கள், மாணவிகளிடம் அத்துமீறுவதும் அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதும்  அதிகரித்து வருகிறது. இதனால் பல மாணவிகள் தற்கொலை முடிவை நாட்டிய அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளி மாணவிகளுக்கு சில பிரச்சினைகள் வருகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும். ஆசிரியர் மாணவியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டார் என்பதால் ஆசிரியர்கள் அனைவரையும் குறைகூற முடியாது.

சென்னை பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியராக இருந்த ராஜகோபாலனுடன் தொடங்கிய இவ்விவகாரம் கோவை பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கர வர்த்தி வரை நீண்டிருக்கிறது. மிதுன் சக்கரவர்த்தியால் மாணவி தற்கொலையே செய்துகொண்டு விட்டார். இதனால் பள்ளிகளில் பாதுகாப்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவிகள் இதுபோன்ற பாலியல் புகார் கூறினால், அதை உடனடியாக துறையின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அதுதான் பள்ளிக்கு நற்பெயரை தரும். பள்ளியில்  ‘மாணவிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் பள்ளி வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கிறது’ என்று பள்ளியின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரிக்குமே தவிர நற்பெயருக்கு களங்கம் ஏற்படாது” ஆனால்,  பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று அதை மறைக்க முயல்வது தவறான செயல். ‘

இவ்வாறு அவர் கூறினார்.