சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லாமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடைமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா வாழ்ந்த மறைந்த வேதா இல்லம் அதிமுகவினருக்கு கோயிலாக இருந்து வருகிறது. அதனால்தான் அதை நினைவு இல்லாமாக மாற்ற அதிமுக முடிவு செய்தது. தற்போது அதை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து கட்சி தலைமை விவாதித்து மேல்நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யும் என்றார்.

தொடர்ந்து செய்தியளார்கள், இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பாஜகவுக்கு மாறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், கட்சியில் சில கருத்துப் பரிமாற்றம் இருக்கும். அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியவர், உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சி மாறமாட்டார்கள். வியாபாரிகள்தான் எந்த குளத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதை பார்த்து இடம் மாறுவார்கள் என்று விமர்சித்தார்.