விழுப்புரம்:
விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 36,755 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 270 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 31,502 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 4,983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் சுதாகர் நகரை சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டியும், விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கத்தை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியும், கம்மாபுரத்தை சேர்ந்த 56 வயது பெண்ணும், திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையை சேர்ந்த 52 வயதுடைய நபரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் ராஜேந்திரா நகரை சேர்ந்த 56 வயதுடைய நபரும், செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனத்தை சேர்ந்த 74 வயதுடைய முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,077 ஆக உயர்ந்துள்ளது.தற்போது மருத்துவமனையில் 4,873 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் சுற்றுலா பயணிகள் மாளிகையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.